புகைமூட்டத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க மலேசிய வலியுறுத்தும்

புகைமூட்டத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க மலேசிய வலியுறுத்தும்

1 mins read
1c7c4572-7bb1-489f-9c08-63c6a3023c48
நேற்றுப் பிற்பகல் 3.30 மணியளவில் பெட்டாலிங் ஜெயாவைச் சூழ்ந்திருந்த புகைமூட்டம். படம்: தி ஸ்டார் -

கோலாலம்பூர்: புகைமூட்டத்தைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி மலேசிய அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், பருவநிலை மாற்ற அமைச்சு அதிகாரபூர்வமாக இந்தோனீசியாவை வலியுறுத்த இருக்கிறது.

செம்பனை மரங்களையும் காகிதங்களுக்கு மூலப்பொருளாகும் மரங்களையும் பயிரிட ஏதுவாக கோடைப் பருவத்தில் இந்தோனீசிய விவசாயிகள் காடுகளையும் புதர்

நிலங்களையும் அடிக்கடி எரிப்பதாகக் கூறப்படுகிறது. பல இடங்களில் இப்படி எரிப்பதன்மூலம் எழும் புகை அண்டை நாடுகளான மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் புகைமூட்டத்தை ஏற்படுத்துகின்றது.

இதனிடையே, இந்தோனீசியாவில் அப்படித் தீப்பற்றி எரியும் இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அங்கு அப்படி 1,393 இடங்களில் தீப்பற்றி எரிவதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுவதாக ஆசியான் நிபுணத்துவ வானிலை மைய அறிக்கை தெரிவித்துள்ளது. அதேபோல, மலேசியாவிலும் 17 இடங்களில் தீப்பற்றி எரிவதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக சரவாக்கில் காற்றின் தரம் சுகாதாரமற்ற நிலையை எட்டியுள்ளது. நேற்றுக் காலை நிலவரப்படி, அங்கு காற்றுத்தரக் குறியீடு '100க்கும் 200க்கும் இடையே' எனும் சுகாதாரமற்ற நிலையில் இருந்தது.

புகைமூட்டம் காரணமாக 1.2 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ளவற்றைப் பார்க்க முடியவில்லை எனச் சொல்லப்பட்டது.

இதையடுத்து, "தீயை அணைத்து, புகைமூட்டம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கூடிய விரைவில் இந்தோனீசியாவிற்கு அரசதந்திரக் குறிப்பு அனுப்பப்படும்," என்று மலேசிய அமைச்சர் இஸ்நரைஸா முனிரா மஜிலிஸ் தெரிவித்துள்ளார்.

தீயை அணைக்க உதவும்படி இந்தோனீசியாவிடம் இருந்து இதுவரை கோரிக்கை எதுவும் வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.