பிரிட்டி‌ஷ் பிரதமரின் தேர்தல் கோரிக்கை நிராகரிப்பு

பிரிட்டி‌ஷ் பிரதமரின் தேர்தல் கோரிக்கை நிராகரிப்பு

2 mins read
71a1780e-f7b3-493f-9cf3-88151641a6f9
பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன். படம்: ராய்ட்டர்ஸ் -

லண்டன்: வரும் அக்டோபர் மாத மத்தியில் பொதுத் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்ற பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கோரிக்கையை அந்நாட்டு எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக நிராகரித்துள்ளன.

பொதுத் தேர்தல் நடத்தலாமா வேண்டாமா என நாளை மறுநாள் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடக்கவிருக்கும் நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிப்பது அல்லது அதனைப் புறக்கணிப்பது என தொழிலாளர் கட்சி, 'தி லிப் டெம்ஸ்', எஸ்என்பி, 'பிளைட் கம்ரி' ஆகிய நான்கு எதிர்க்கட்சிகளும் முடிவு செய்துள்ளன.

இதனிடையே, அரசியல் கட்சிகள் அசாதாரணமான அரசியல் தவற்றைச் செய்து வருவதாக திரு ஜான்சன் குறிப்பிட்டுள்ளார்.

அக்டோபர் 17, 18ஆம் தேதிகளில் பிரசல்சில் உச்சநிலை மாநாடு நடக்கவிருக்கும் நிலையில், அதற்குமுன் 15ஆம் தேதியே பொதுத் தேர்தல் நடத்தப்படவேண்டும் என திரு ஜான்சன் விரும்புகிறார்.

முன்னதாக, பிரிட்டிஷ் நாடாளுமன்றக் கூட்டத்தைத் தற்காலிகமாக ரத்து செய்த பிரதமர் ஜான்சனின் முடிவை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட மனுவை அந்நாட்டு உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

ஆயினும், இதன் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அது அனுமதி அளித்தது.

இம்மாத மத்தியில் இருந்து அடுத்த மாத மத்தி வரை பிரிட்டிஷ் நாடாளுமன்றக் கூட்டத்தைத் தற்காலிமாக ரத்து செய்வதாக ஒரு வாரத்திற்குமுன் திரு ஜான்சன் அறிவித்திருந்தார்.

அவரது இந்த நடவடிக்கை, 'சட்டவிரோதமான அதிகார துஷ்பிரயோகம்' எனக் கூறி கினா மில்லர் எனும் தொழிலதிபர் வழக்குத் தொடுத்தார்.

இந்நிலையில், தமது மனு நிராகரிக்கப்பட்டது வருத்தமளிப்பதாக உள்ளது எனக் குறிப்பிட்டார் திருவாட்டி மில்லர்.

மேல்முறையீட்டு மனு குறித்து உச்ச நீதிமன்றம் அடுத்த மாதம் 17ஆம் தேதி விசாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.