சோல்: கொரிய தீபகற்பத்தை சக்தி வாய்ந்த 'லிங்லிங்' சூறாவளி தாக்கியதால் தென்கொரியாவில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
ஏராளமான மரங்கள் சாய்ந்துவிட்டதாகவும் பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகவும் தென்கொரியாவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
லிங்லிங் சூறாவளியால் மழையோடு பலத்த காற்றும் வீசியது. இதனால் ஜேஜு தீவிலுவும் தெற்குப் பகுதியிலும் 30,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்று தென்கொரிய உள்துறை, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
சூறாவளி தாக்கியதால் காயம் அடைந்தவர்கள் பற்றி உடனடியாகத் தகவல் இல்லை என்று அமைச்சு கூறியது.
சனிக்கிழமை காலை 184 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி தெற்கு கடலோரப் பகுதிகளை தாக்கியது. பின்னர் வடக்கு நோக்கி அது நகர்ந்தது என்று தென்கொரிய வானிலை ஆய்வு நிலையம் குறிப்பிட்டது.
ஜேஜு தீவில் ஒரே இரவில் மரங்களையும் சாலை விளக்கு கம்பங்களையும் சூறாவளி சாய்த்துவிட்டது. இதனால் 89 விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டன. சோலுக்கு அருகே வெள்ளம் சூழ்ந்த வீடுகளிலிருந்து 38 பேருக்கு மேல் வெளியேற்றப்பட்டனர். தேசிய பூங்காக்களும் முக்கிய போக்குவரத்து பாலங்களும் மூடப்பட்டன.
இந்த நிலையில் சூறாவளியைத் தொடர்ந்து வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்று தென்கொரிய வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் இன்று பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அது கூறியுள்ளது.
மற்றொரு நிலவரத்தில் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் பேரிடர் சேதங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க அவசர கூட்டத்தை கூட்டியுள்ளார் என்று வடகொரியாவின் அதிகாரபூர்வ ஊடகம் தெரிவித்தது.
சூறாவளியால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்று கூறிய அரசாங்க அதிகாரிகளை திரு கிம் சாடினார் என்றும் அந்த ஊடகம் குறிப்பிட்டார். பேரிடரால் ஏற்படும் சேதங்களை குறைக்க நாடு தழுவிய முயற்சிகளுக்கு ராணுவத்தின் உதவியை கிம் நாடியுள்ளார்.

