வாஷிங்டன்: கலிஃபோர்னியாவில் கடந்த வாரம் படகு தீப்பற்றி மூழ்கியதில் சிங்கப்பூரரான டான் வெய் உட்பட 34 பேர் மாண்டனர்.
இவர்களில் இதுவரை 18 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சாண்டா பார்பரா ஷெரிஃப் அலுவலகம் தெரிவித்தது. கலிஃபோர்னியாவில் உள்ள பெர்கிலி பல்கலைக் கழகத்தில் அண்மையில் பொறியியல் முதுநிலை பட்டப் படிப்பை முடித்திருந்த 26 வயது டான், கடந்த ஜூன் மாதம் சாண்டா பார்பராவில் தரவு அறிவியல் அறிஞராக வேலைக்குச் சேர்ந்தார். இவர், விபத்தில் இறந்துவிட்டதை மரபணுச் சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதே விபத்தில் சிக்கிய மற்றொரு சிங்கப்பூரரான 46 வயது ஆய்வு அறிவியல் அறிஞர் சுனில் சிங் சந்து பற்றி இதுவரை தகவல் இல்லை. இறந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று மட்டுமே அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கிடையே சாண்டா பார்பராவின் ஷெரிஃப் பில் பிரவுன், விபத்தில் சிக்கியவர்கள் புகையை சுவாசித்ததால் மரணமடைந்தனர் என்றார். தீக்காயம் ஏற்படுவதற்கு முன்பே புகையை சுவாசித்து சிலர் மரணமடைந்துள்ளதை தடயவியல் சோதனையில் தெரிய வந்துள்ள தாக அவர் தெரிவித்தார்.

