காபூல்: காபூலில் நடந்த பயங்கர வாதத் தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டதற்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றதையடுத்து, அதன் தலைவர்களுடனான ரகசிய சமாதான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
மேரிலாந்தின் கேம்ப் டேவிட் நகரில் உள்ள அதிபர் மாளிகை வளாகத்தில் நேற்று தலிபானின் முக்கிய தலைவர்களுடன் ஒரு ரகசிய சந்திப்பிற்குத் திட்டமிட்டதாக டிரம்ப் கூறினார். இதனை அடுத்து ஆப்கானிஸ்தானின் அதிபர் அஷ்ரப் கனியை சந்திக்கவும் டிரம்ப் திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளை தமது கட்டுப்பாட்டில் இருந்து இழந்த தலிபான் போராளிகள், மேலும் சில இடங்களைக் கைப்பற்றும் முனைப்புடன் கடந்த வாரத்தில் வடக்கு நகரங்களான குண்டுஸ் மற்றும் புல்-இ கும்ரி பகுதிகள் மீது புதிய தாக்குதல்களை நடத்தியது.
அத்தோடு கடந்த வாரம் தலைநகர் காபூலில் இரண்டு பெரிய தற்கொலைத் தாக்குதல்களையும் தலிபான் போராளிகள் நடத்தி
இருந்தனர்.
அவ்வாறு கடந்த வியாழக்
கிழமை நடத்தப்பட்ட ஒரு தற்கொலைத் தாக்குதலில் 34 வயதுடைய அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
"தலிபான்கள் முக்கியமான இந்த அமைதி பேச்சுவார்த்தை காலத்தில்கூட போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அர்த்தமுள்ள எந்த உடன்படிக்கைக்கும் அவர்கள் தயாராக இல்லை என்பது புரிகிறது.
"எனவே சமாதான பேச்சுவார்த்தையை நான் உடனடியாக ரத்து செய்துவிட்டேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு மட்டும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 16 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

