வெளிநாட்டுத் தலையீட்டுக்கு ஹாங்காங் அரசு கண்டனம்

வெளிநாட்டுத் தலையீட்டுக்கு ஹாங்காங் அரசு கண்டனம்

1 mins read
c88f0616-ce05-4604-9434-eb068f42cfca
பொது இடத்தில் அரிதாக தோன்றிய ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் (நடுவில்), மத்திய ரயில் நிலையத்தில் ஏற்பட்ட சேதத்தை நேற்று பார்வையிட்டார். RTHK காணொளிப் படம் -

ஹாங்காங்: நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தின்போது இடம்பெற்ற வன்முறையை ஹாங்காங் அரசாங்கம் கடுமையாகக் கண்டித்துள்ளது.

அன்றிரவு பெருமளவில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், மத்திய வட்டாரத்தின் சாலைகளை மறித்தனர். ரயில் நிலையத்தைச் சேதப்படுத்திய அவர்கள், சில இடங்களில் தீ மூட்டினர். இதனால் பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்களின் இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் பொதுமக்களின் உரிமைகளைப் பறிப்பதாக ஹாங்காங் அரசாங்கப் பேச்சாளர் வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இதற்கிடையே, ஹாங்காங் உள்நாட்டு விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிடக்கூடாது என்று சீனா மீண்டும் எச்சரித்துள்ளது.

தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று முன்தினம் ஹாங்காங்கில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் மனுக் கொடுத்தனர். இந்நிலையில், சீனா மீண்டும் அந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஒரு காலத்தில் பிரிட்டனின் அதிகாரத்தில் இருந்த ஹாங்காங் 1997ல் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே ஹாங்காங்கின் இந்த நிலைமை உள்நாட்டு விவகாரம் என சீனா கூறியுள்ளது.

இதற்கிடையே, ஹாங்காங்கிற்கு வரும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்புநோக்க, கடந்த மாதம் 40 விழுக்காடு குறைந்தது.

ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில், கடந்த 2003, மே மாதம் ஏற்பட்ட 'சார்ஸ்' நோய்த்தொற்றுக்குப் பிறகு இது மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.