வீட்டுச் சமையலறைக்குள் காரை நிறுத்திய ஆடவர்

வீட்டுச் சமையலறைக்குள் காரை நிறுத்திய ஆடவர்

1 mins read
37ec8882-f7c1-4347-85e0-7a6a46a17c72
-

ஃபுளோரிடா: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்திலுள்ள ஒரு வீட்டின் சமையலறைக்குள் சிறிய கார் ஒன்று நிறுத்தப்பட்டதைக் காட்டும் படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன. அறிவார்ந்த தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள தங்களது காரை வீட்டுச் சமையலறையில் நிறுத்திவைக்க முடியுமா என்று தமது மனைவி விளையாட்டுக்காக விடுத்த சவாலை பேட்ரிக் எல்ரிட்ஜ் என்பவர் வெற்றிகரமாக நிறைவேற்றினார்.

லத்தீன் அமெரிக்காவின் பஹாமஸ் நாட்டைப் புரட்டிப் போட்ட 'டோரியன்' புயல் ஃபளோரிடாவை நோக்கி நகர்கிறது. இந்நிலையில், புயலால் தமது கார் இழுத்துச் செல்லப்படுவதைத் தடுக்க அதனை வீட்டின் சமையலறையில் நிறுத்த முற்பட்டார் பேட்ரிக்.

"அவரால் இதனைச் செய்யவே முடியாது எனக் கூறியிருந்தேன். ஆனால் அவரோ, இது தம்மால் இயலும் என்று உறுதிபூண்டார். சமையலறையின் ஒரு பக்கமாக இருந்த இரட்டைக் கதவுகளைத் திறந்து காரை உள்ளே நுழைத்து அதனை எந்தப் பிரச்சினையுமின்றி சாதூரியமாக அவர் நிறுத்தினார்," என்றார் பேட்ரிக்கின் மனைவி ஜெசிக்கா.

ஃபுளோரிடா மாநிலத்தின் கரையோரமாகச் சென்றுகொண்டிருந்த டோரியன் புயல், அந்தத் தம்பதி வசிக்கும் ஜாக்சன்வில் நகரை நூலிழையில் விட்டுவிட்டு ஜார்ஜியா, தென் கரோலினா, வட கரோலினா ஆகிய மாநிலங்களை நோக்கிச் சென்றது.

பஹாமஸை இந்தப் புயல் உலுக்கி எடுத்ததில் 43க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் இதுவரை இந்தப் புயலால் இருவர் மாண்டனர்.