மணிலாவில் அவசரகால நோயாளிகளின் உயிரைப் பறிக்கும் போக்குவரத்து நெரிசல்

மணிலாவில் அவசரகால நோயாளிகளின் உயிரைப் பறிக்கும் போக்குவரத்து நெரிசல்

2 mins read
d1c9cfe3-0eb8-44ee-b5fd-569948e2f123
மணிலாவின் நெடுஞ்சாலை ஒன்றில் ஆம்புலன்சை ஓட்டிச்செலும் ஜோசஃப் லேய்லோ. படம்: ஏஎஃப்பி -

மணிலா: மக்கள்தொகை மற்றும் சாலைகளில் வாகன எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் உலகின் பல நாடுகளில் போக்குவரத்து நெரிசல் நிலவுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. எனினும், உயிருக்குப் போராடும் நோயாளிகளை ஆம்புலன்ஸ் மூலம் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அதன் ஓட்டுநர்களால் கொண்டுச் செல்ல முடியாத அவலநிலை பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் ஏற்பட்டுள்ளது.

அவசரகால வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கும் சாலை வழித்தடங்களை உச்ச நேரங்களில் மற்ற வாகனங்கள் அடைத்துக்கொள்கின்றன. அந்நகரில் அதிகரித்து வரும் வாகன எண்ணிக்கைக்கு ஈடுகொடுக்க முடியாமல் சாலை உள்கட்டமைப்பு பின்தங்கி இருப்பதும் நிலைமையை மோசமடையச் செய்துள்ளது. அதுபோக, போக்குவரத்து நெரிசலில் அவசரகால வாகனங்கள் செல்ல மற்ற ஓட்டுநர்கள் வழிவிட முடியாததும் சிலர் வழிவிட மறுப்பதும் சாதாரணமாகிவிட்டது. இதன் காரணமாக, உயிருக்காக போராடும் நோயாளிகள், ஆம்புலன்சிலேயே இறந்துவிடும் பரிதாப நிலை ஏற்படுகிறது.

"என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. உயிருக்குப் போராடுபவர்களைக் காப்பாற்ற எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டும் என்னால் அதை நிறைவேற்ற இயலவில்லை," என்று புலம்புகிறார் ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் மருத்துவ உதவியாளருமான ஜோசஃப் லேய்லோ.

"போக்குவரத்து நெரிசல் அவ்வளவு மோசமாக இல்லாவிட்டால், பல நோயாளிகள் நிச்சயமாக காப்பாற்றப்பட்டிருப்பர்," என்றார் அவர்.

சம்பவ இடத்திலிருந்து மருத்துவமனைக்குச் செல்ல குறுக்கு வழியை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் தெரிந்து வைத்திருப்பதால் ஒன்றும் பலனில்லை. அத்துடன், மற்ற ஓட்டுநர்கள் வழிவிடச் செய்வதற்கு எச்சரிக்கை ஒலியை எழுப்புவதும் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை என்பது ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களின் வருத்தமாக உள்ளது.

மணிலாவின் நெடுஞ்சாலைகளில் உச்ச நேரங்களில் 25 கிலோ மீட்டர் தூரத்தைக் கடப்பதற்கு மூன்று மணி நேரம் வரை ஆகலாம்.

அந்நகரில் ஏறத்தாழ 13 மில்லியன் பேர் வசிக்கின்றனர். கிட்டத்தட்ட ஒரு நபருக்கு ஒரு வாகனம் என்ற அளவுக்கு வாகன எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உயிருக்குப் போராடும் நோயாளிகளின் உயிர் பறிக்கப்படுவதோடு, போக்குவரத்து நெரிசல் காரணமாக உற்பத்தித்திறன் இழக்கப்படுவதால் நாள் ஒன்றுக்கு 67 மில்லியன் டாலர் (S$92.4 மி.) வருமானத்தை அந்நகர் இழக்கிறது.

போக்குவரத்து நெரிசலால் ஒவ்வோர் ஆண்டும் உயிரிழக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை குறித்து அரசாங்கமோ ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் நிறுவனங்களோ கணக்கு வைத்திருப்பதில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.