வங்கிக் கணக்கில் தவறுதலாகப் போடப்பட்ட US$120,000; செலவிட்ட தம்பதிமீது திருட்டுக் குற்றச்சாட்டு

1 mins read
37d04f93-260f-41e6-be92-eebba586b21c
-

வங்கி ஊழியர் செய்த பிழையால், ராபர்ட் வில்லியம்ஸ், டிஃபானி வில்லியம்ஸ் தம்பதியரின் பிபி&டி வங்கிக் கணக்கில் US$120,000 போடப்பட்டது. தங்களுடைய பணம் இல்லை என்று தெரிந்த பிறகும் சுமார் இரண்டரை வாரங்களுக்குள் அதில் US$100,000ஐ செலவு செய்துவிட்டதால் அவர்கள் மீது திருட்டுக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் மொன்டுவர்ஸ்வில் நகரைச் சேர்ந்த இந்தத் தம்பதியர், அந்தப் பணத்தைக் கொண்டு மூன்று வாகனங்கள் வாங்கியதுடன், பணம் தேவைப்பட்ட நண்பர்களுக்கு US$15,000 கொடுத்தனர்.

வங்கி அதன் பிழையைச் சரிசெய்து சரியான கணக்குக்குப் பணத்தை அனுப்பிய பிறகு, ஜூன் 20ஆம் தேதிவாக்கில் தம்பதியருடன் தொடர்பு கொண்டது.

செலவழித்த பணம் முழுவதையும் திருப்பித் தருவது அவர்களது பொறுப்பு என 35 வயது டிஃபானியிடம் வங்கி தெரியப்படுத்தியது.

பணத்தைத் திருப்பிக்கொடுக்க தனது கணவருடன் சேர்ந்து ஏற்பாடு செய்வதாக வங்கியிடம் ஆரம்பத்தில் உறுதியளித்த டிஃபனியுடன் பிற்பாடு தொடர்புகொள்ள இயலாமல் போய்விட்டது என வில்லியம்ஸ்போர்ட் சன்-கெசட் இதழிடம் காவல்துறை அதிகாரி ஆரன் பிரவுன் தெரிவித்தார். நீதிமன்றத்தில் முன்னிலையான தம்பதி பிணை கோரினர்.

தவறுதலாகப் பணம் போடப்படுவதற்குமுன் தம்பதியரின் வங்கிக் கணக்கில் US$1,121 டாலர் மட்டுமே இருந்தது.