தேசிய பாதுகாப்பு ஆலோசகரைப் பதவியிலிருந்து நீக்கிய டிரம்ப்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்,  தமது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டனை பதவியிலிருந்து திடீரென வெளியேற்றினார்.  வடகொரியா, ஈரான், ஆப்கானிஸ்தான், ரஷ்யா ஆகிய  நாடுகளுடன் தொடர்புடைய வெளியுறவுக் கொள்கைகள் குறித்து  திரு போல்ட்டனுக்கும்  திரு டிரம்ப்புக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாகத் திரு டிரம்ப் இந்த முடிவுக்கு வந்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

“வெள்ளை மாளிகையில் அவரது சேவை இனி தேவைப்படாது என்று நான் ஜான் போல்ட்டனிடம் கடந்த இரவு தெரிவித்தேன். அவரது பரிந்துரைகள் பலவற்றை நானும்  எனது நிர்வாகத்தினரும் வன்மையாக எதிர்க்கிறோம்,” என்று செவ்வாய்க்கிழமை திரு டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்தார். திரு போல்ட்டனுக்குப் பிறகு பதவிக்கு வருபவரின் பெயர் அடுத்த வாரம் வெளியிடப்படும் என டிரம்ப் கூறினார்.

போரை அதிகமாகச் சார்ந்த வெளியுறவுக் கொள்கையைக் கொண்டுள்ள திரு போல்ட்டன், ஈரானியத் தலைவர்களைத் திரு டிரம்ப்  சந்திப்பதைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறார். அத்துடன் ரஷ்யா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு எதிராக மேலும் கடுமையான வெளியுறவுக் கொள்கைளுக்குத் திரு போல்ட்டன் குரல்கொடுத்து வருகிறார்.