ஒரு சில அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா வரிவிலக்கு

ஒரு சில அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா வரிவிலக்கு

1 mins read

பெய்ஜிங்: வர்த்தகப் போர் தொடங்கியதில் இருந்து முதல் முறையாக அமெரிக்கப் பொருட்கள் சில

வற்றின் மீதான இறக்குமதி வரியை சீனா விலக்கிக்கொண்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரிவிதிப்பது தொடர்பான வர்த்தக ஒப்பந்தம் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இன்னும் கையெழுத்தாகாததால் ஓராண்டு காலமாக அந்த இரு நாடுகளும் வர்த்தகப் போரில் ஈடுபட்டு வருகின்றன. அந்தப் போர் தீவிரமடைந்தும் வந்தது.

இருநாடுகளும், பரஸ்பரம் இறக்குமதி செய்துகொள்ளும் பொருட்கள் மீது மாறி மாறி கூடுதல் வரிவிதித்து பழிதீர்த்து வருகின்றன.

இந்த நிலையில், வர்த்தகப் போர் தொடங்கியதில் இருந்து முதல்முறையாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இறால், பண்ணை விலங்குகளுக்கான மீன் உணவு, புற்றுநோய்க்கான மருந்து போன்ற 16 வகைப் பொருட்களுக்கு சீன வரிவிதிப்பு ஆணையம் வரிவிலக்கு அளித்துள்ளது. வரும் 17ஆம் தேதி அமலுக்கு வரும் இந்த வரிவிலக்கு ஓராண்டுக்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

16 வகைப் பொருட்களில் 12 பொருட்களுக்கு ஏற்கெனவே வரி செலுத்தியவர்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் இதர நான்கு பொருட்களுக்கு செலுத்தப்பட்ட வரிப்பணம் திரும்பக் கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில அமெரிக்கப் பொருட்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்த பரிந்துரைகளைப் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்று சீனா கூறியுள்ளது.