மலேசிய அமைச்சர்: “புள்ளிவிவரங்கள் உண்மையைப் பேசட்டும்”

மலேசியாவில் நிலவிவரும் அபாயகரமிக்க புகைமூட்டத்திற்குத் தாங்கள் காரணமல்ல எனக் கூறிய இந்தோனீசியாவை மலேசியா கண்டித்திருக்கிறது. மலேசியாவின் புகைமூட்டத்திற்கு இந்தோனீசியாவே காரணம் எனப் புள்ளிவிவரங்கள் தெள்ளத் தெளிவாகக் காட்டுவதாக அந்நாட்டின் எரிபொருள், அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சர் இயோ பீ யின் தெரிவித்தார்.

“புள்ளிவிவரங்கள் உண்மையைப் பேசட்டும். இந்தோனீசிய அமைச்சர் சித்தி நூர்பயா உண்மையை மறுக்கும் மனப்பான்மையில் இருக்கக்கூடாது,” என்று திருவாட்டி இயோ, புதன்கிழமை (செப்டம்பர் 11) தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார்.

மலேசியாவின் பல பகுதிகளைப் புகைமூட்டம் சூழ்ந்துள்ளதற்கும் அங்குள்ள பள்ளிகள் மூடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதற்கும்  தாங்கள் காரணம் அல்ல என்று நேற்று இந்தோனீசிய அரசு கூறியது. மலேசிய ஊடகங்கள் கூறுவதுபோல் தாங்கள் புகைமூட்டத்திற்குக் காரணம் இல்லை என்றும் மலேசியாவிலேயே ஏற்பட்டு வரும் காட்டுத் தீச்சம்பவங்கள்தான் அந்நாட்டின் புகைமூட்டத்திற்குக் காரணம் என்றும் இந்தோனீசியா கூறியுள்ளது. மலேசியா, அதன் நாட்டிலேயே ஏற்பட்டு வரும் காட்டுத் தீச்சம்பவங்கள் குறித்து வெளிப்படைத் தன்மையுடன் நடந்துகொள்ளவில்லை என்று இந்தோனீசிய சுற்றுச்சூழல் வனவியல் அமைச்சர் சிட்டி நூர்பயா பக்கர் மலேசியாவைச் சாடியுள்ளார்.

 

இதனை மறுத்த திருவாட்டி இயா, ஆசியான் சிறப்பு வானிலை ஆய்வு நிலையத்தின் செயற்கைக்கோள் படம் ஒன்றை வெளியிட்டார். அது கலிமந்தானில் காட்டுத்தீ ஏற்படக்கூடிய வெப்ப மையங்களின் எண்ணிக்கை 474 என்றும் சுமத்திராவில் 387 என்றும் காண்பிப்பதாக அவர் சுட்டினார். இத்தகைய வெப்ப மையங்கள் மலேசியாவில் ஏழு மட்டுமே இருப்பதாக அந்தப் படம் காட்டுவதாகத் திருவாட்டி இயோ கூறினார்.

சரவாக்கிலிருந்து புகைமூட்டம் இந்தோனீசியாவுக்கு வருவதாகத் திருவாட்டி சிட்டி நூர்பயா கூறியது நியாயத்திற்குப் புறம்பானது என்றும் திருவாட்டி இயோ சாடினார். காற்றுத் திசையைக் காட்டும் ஓர் இணைப்பையும் திருவாட்டி இயோ தமது பதிவில் சேர்த்திருக்கிறார். 

 மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது, இந்தோனீசிய அமைச்சரின் கருத்துக்குப் பதில் கூற மறுத்திருக்கிறார்.

“பரவாயில்லை, அது அவரது சொந்தக் கருத்து. அது பற்றி நாம் எதுவும் சொல்வதாக இல்லை,” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.