மலேசியாவில் மோசமடையும் புகைமூட்டம்; பல பள்ளிகள் மூடப்பட்டன

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் ஏற்பட்டிருக்கும் மோசமான புகைமூட்டத்துக்கு இந்தோனீசியாதான் காரணம் என்று தரவுகள் காட்டுவதாக மலேசியாவின் எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுப்புறம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சர் இயோ பீ யின் தெரிவித்துள்ளார்.

“தரவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. இந்தோனீசியாவின் சுற்றுப்புற, வனத்துறை அமைச்சர் சிட்டி நூர்பாயா பக்கர் உண்மையை மறுக்கக்கூடாது,” என்று திருவாட்டி இயோ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தார்.

அமைச்சர் சிட்டி நூர்பாயா உண்மை நிலவரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அதற்கு மாறாக மலேசியாவை குறைகூறக்கூடாது என்றும் அமைச்சர் இயோ கூறினார்.

மலேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் அந்நாடு புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் சிட்டி நூர்பாயா கூறியதாக தகவல் வெளியானதை அடுத்து திரு இயோ இவ்வாறு கருத்துரைத்தார்.

மலேசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீச்சம்பவங்கள் குறித்து அந்நாடு வெளிப்படையாக இல்லை என்று திருவாட்டி சிட்டி நூர்பாயா குற்றம் சாட்டினார்.

தமது ஃபேஸ்புக் பதிவுடன் ஆசியான் சிறப்பு வானிலை மையத்தின் இணையத்தளத்துக்கான இணைப்பையும் திருவாட்டி இயோ சேர்த்திருந்தார்.

அந்த இணையத்தளத்தில் காட்டப்படும் ஆக அண்மைய தரவுகளின்படி இந்தோனீசியாவின் களிமந்தானில் 474 இடங்களும் சுமத்திராவில் 387 இடங்களும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே, புகைமூட்டம் காரணமாக மலேசியாவில் பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

சிலாங்கூர் மாநிலத்தில் மட்டும் இதுவரை ஐந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியதால் பள்ளிகள் மூடப்பட்டன. காற்றுத் தூய்மைக்கேடு குறியீடு 200க்கும்  அதிகமாக நேற்று பதிவாகியதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாஹாங் மாநிலத்தின் ரொம்பின் மாவட்டத்தில் புகைமூட்டம் மோசமாக இருந்ததால் அப்பகுதியில் குறைந்தது  ஒரு பள்ளி மூடப்பட்டது. 

மாணவர்களுக்கான அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளையும் நிறுத்தும்படி  பள்ளிகளுக்கு பினாங்கு மாநில அரசாங்கம் நேற்று உத்தரவிட்டது.

சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் 100,000 முகக் கவசங்கள் உடனடியாக விநியோகம் செய்யப்படும் என்று பினாங்கு சுற்றுப்புறக் குழுத் தலைவர் ஃபீ பூன் போ தெரிவித்தார்.

இதற்கிடையே, புகைமூட்டம் மோசமடைந்துள்ளதால் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளவும் அதிகத் தண்ணீர் அருந்தவும், வெளிப்புறங்களில் பொருட்களை எரிப்பதை நிறுத்தவும் மலேசிய மக்களுக்கு அந்நாட்டின் மாமன்னர்  அறிவுறுத்தியுள்ளார் என்று தி ஸ்டார் நாளிதழ் நேற்று தகவல் வெளியிட்டது.

Loading...
Load next