மலேசியா: இந்திய ஊழியருக்கு 13 ஆண்டு சிறை, ஏழு பிரம்படி

கோலாலம்பூர்: துப்புரவாளராகப் பணியாற்றிய இந்தோனீசியப் பெண் ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக மலேசியாவில் வேலை செய்து வந்த இந்திய நாட்டவர் ஒருவருக்கு 13 ஆண்டு சிறையும் ஏழு பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டன.

பாலு நாராயணன், 36, என்ற அந்த ஆடவர் கடந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் பிரிக்ஃபீல்ட்ஸ், ஜாலான் தாமான் ஸ்ரீ செந்தோசாவில் அந்தக் குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட 43 வயது இந்தோனீசியப் பெண் போலிசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, 2018 டிசம்பர் 20ஆம் தேதி பாலு கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி தொடங்கியது. பாலுவுக்கு எதிராக பத்துப் பேரும் அவரைத் தற்காத்து ஒருவரும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தனர்.

இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி நொரடுரா, “பணி நிமித்தமாகவும் சுற்றிப் பார்க்கவும் வரும் வெளிநாட்டவர்களை மலேசியா எப்போதும் வரவேற்கிறது. அதற்காக, இங்கு தாங்கள் விரும்பும் எதையும் செய்யலாம் என வெளிநாட்டவர்கள் கருதிவிடக்கூடாது; மலேசியச் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும்,” என்றார்.

மலேசியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஒருபோதும் சகித்துக்கொள்ளப்பட மாட்டாது என்பதை அனைவருக்கும், குறிப்பாக வெளிநாட்டவர்களுக்கு உணர்த்தும் வகையில் பொருத்தமான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.