மரணத்தின் விளிம்பில் ஒரு செல்ஃபி

பளிச்சிடும் நீலக்கல் போன்ற நீர்ப்பகுதி, பார்ப்பவரை மலைக்க வைக்கும் மலைத்தொடர் என பெரூவிலுள்ள லகுனா ஹுமாண்டே கண்ணைக் கவரும் பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது.

அங்குள்ள ஒரு செங்குத்துப்பாறையின் மீது தம்பதியர் இருவர் செல்ஃபி எடுத்துக்கொண்ட படம், இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. பாறையின் விளிம்பில் அமர்ந்துகொண்டிருந்த ஓர் ஆடவர், தமது துணைவியின் இரு கைகளையும் இறுகப் பற்றிக்கொண்டிருந்தார். அந்தப் பெண் மிக ஆபத்தான விதமாக ஒரு காலை செங்குத்துப்பாறையின் இடுக்கில் பதித்து மற்றொரு காலை அந்தரத்தில் தொங்கவிட்டதை அந்தப் படம் காட்டுகிறது.

இவர்கள் இத்தகைய படங்களை எடுத்துச் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யும்போது அது மற்றவர்களையும் இதுபோன்ற படங்களுக்காகத் தங்களை ஆபத்துக்குள்ளாக்குவதைத் தூண்டிவிடுவதாகச் சிலர் குறைகூறுகின்றனர்.

பாலித் தீவில் இவர்கள் இருவரும் முன்னதாக இதுபோன்ற ஒரு படத்தை எடுத்திருந்தபோது அதற்கும் குறைகூறல்கள் எழுந்தன. மிக நெட்டையாகக் காணப்படும் சுவர் ஒன்றின்மீது நின்று அந்த ஆடவர் தனது துணைவியை அந்தரத்தில் தொங்கவிட்டு அவரது கரங்களால் மட்டும் தாங்கிப் பிடித்துக்கொண்டு முத்தமிடுவதை அந்தப் படம் காட்டுகிறது.

ஆயினும், இவை அனைத்தும் புகைப்பட ஜாலம் என்றும் உண்மையிலேயே இந்தப் படங்கள் எடுக்கப்பட்டபோது அவர்களது உயிருக்கு எந்த அபாயமும் ஏற்படவில்லை என்றும் அந்தத் தம்பதியரே கூறுகின்றனர்.

படங்களை எடுப்பதற்காகச் சிரமப்படுவது வேறு என்றும் அதற்காகச் சொந்த உயிரைப் பணயமாக்கிக்கொள்வது வேறு என்றும்  அமெரிக்காவைச் சேர்ந்த கெல்லி கெஸ்டில்லும் கோடி வர்க்மனும் கூறுகின்றனர். “எங்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் விதமாக நாங்கள் எதையும் செய்யமாட்டோம். எங்களுக்கு இடையே ஆழ்ந்த நம்பிக்கை நிலவுகிறது. அத்துடன் மக்கள் சுயமாக முடிவெடுக்கக்கூடியவர்களே. நாங்கள் செய்வதைப் பார்த்து பிறர் முடிவெடுப்பது பற்றி அக்கறை கொள்வதில்லை” என்கின்றனர் அந்தத் தம்பதியர்.