திருடப்பட்ட தங்கக் கழிவறைத் தொட்டி

பிரிட்டனின் பழம்பெரும் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்ஹில் வாழ்ந்த இல்லத்தில் அமைக்கப்பட்ட கலைக் கண்காட்சியிலிருந்து தங்கக் கழிவறைத் தொட்டி ஒன்று திருடப்பட்டுள்ளது.  காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அந்த 18 காரட் தங்கத் தொட்டியின் மதிப்பு கிட்டத்தட்ட 1 மில்லியன் பவுண்டு  (S$1.7 மில்லியன்). வேறு சில செய்தி அறிக்கைகளோ அதன் மதிப்பை 5 மில்லியன் அமெரிக்க டாலராகக் (S$6.8 மில்லியன்) குறிப்பிடுகின்றன.

இத்தாலியைச் சேர்ந்த மௌரிஸியோ கெட்டலனின் கைவண்ணத்தால் உருவான இத்தொட்டி, இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் திரு சர்ச்ஹில்லின் இல்லமான பிலென்ஹம் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. லண்டனிலிருந்து மேற்குத் திசையில் 100 கிலோ மீட்டர் தூரமுள்ள ஆக்ஸ்ஃபர்டுஷியர் பகுதியில் அமைந்துள்ள இந்த அரண்மனைக்குச் சுற்றுப்பயணிகளும் கலை ஆர்வலர்களும் செல்வது வழக்கம். கழிவறைத் தொட்டி இதற்கு முன்னர் நியூயார்க்கின் குகன்ஹம் அரும்பொருளகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

திருடர்கள் அந்தத் தொட்டியை மட்டும் திருடியதாகவும் சனிக்கிழமை அதிகாலை சுமார் 4.50 மணிக்கு அவர்கள் கண்காட்சி இடத்தைவிட்டு தப்பிவிட்டதாகவும் பிரிட்டிஷ் போலிசார் தெரிவித்தனர். தொட்டியைத் திருடியவர்கள் இதற்காகக் குறைந்தது இரண்டு வாகனங்களைப் பயன்படுத்தியதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்தச் சம்பவத்தின் தொடர்பில் 66 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், கண்காணிப்புக் கருவிகளில் பதிவான காணொளியும் ஆராயப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தேம்ஸ் வேலி போலிஸ் இன்ஸ்பெட்கர் ஜெஸ் மில்ன் கூறுகையில், “தங்கக் கழிவறைத் தொட்டி இன்னும் மீட்கப்படவில்லை. ஆயினும், சம்பவத்தைத் தீவிரமாக விசாரித்த பிறகு இதற்குக் காரணமானவர்களைச் சட்டத்திற்கு முன் நிறுத்துவோம்,” என்றார்.

இச்சம்பவம் வருத்தம் அளித்துள்ளபோதும் எவரும் காயமடையவில்லை என்பது குறித்து நிம்மதியுடன் அதிகாரிகள் இருப்பதாக பிலென்ஹம் அரண்மனை தெரிவித்தது.