ஹாங்காங்கில் மீண்டும் வன்முறை

ஹாங்காங்கில் மீண்டும் வன்முறை

1 mins read
8c33fa40-84ba-4c0d-a207-2325bc2e785a
அரசாங்க தலைமை யகத்திற்கு வெளியே நேற்று பெரும் அளவில் திரண்ட ஆர்ப்பாட்டக் காரர்களைக் கலைக்க அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசிய போலிசார். படம்: ஏஎஃப்பி -

ஹாங்காங்: ஹாங்காங் சட்டமன்ற வளாகத்திற்கும் மத்திய அரசாங்க அலுவலகங்களுக்கும் அருகே நேற்று திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி அவர்களைக் கலைக்க முற்பட்டனர். பெட்ரோல் குண்டுகளையும் செங்கற்களை வீசி ஆர்ப்பாட்டக்காரர்கள் கலவரத்தை ஏற்படுத்த முற்பட்டதையடுத்து அதிகாரிகள் எச்சரித்தும் அவர்கள் கலைய மறுத்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையே, சட்டமன்ற வளாகத்தைவிட்டு அனைவரும் உடனடியாக வெளியேறும்படி சட்டமன்றச் செயலகம் நேற்று சிவப்பு எச்சரிக்கையை விடுத்தது.

முன்னதாக, ஹாங்காங்கில் அமைந்துள்ள சீன ராணுவத் தளத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் செங்கற்களை வீசினர். அதோடு, சீனாவின் 70வது ஆண்டு நிறைவைச் சித்திரிக்கும் சிவப்பு நிற பதாகையை அவர்கள் கிழித்து எரித்தனர்.

இது ஒருபுறமிருக்க, அட்மிரல்ட்டி எம்டிஆர் ரயில் நிலையத்தின் கண்ணாடிச் சன்னல்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், நாற்காலிகள், இதர பொருட்களைக் கொண்டு ரயில் நிலையத்தின் நுழைவாயிலை வழிமறித்தனர்.

நேற்று மாலை வேளையில், மற்ற இரு ரயில் நிலையங்கள் மூடப்பட்டன. நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எம்டிஆர் நிறுவனம் விவரித்தது.

போலிஸ் விதித்திருந்த தடையையும் எதிர்த்து நேற்று முற்பகலில், ஹாங்காங் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் காஸ்வே பே பகுதியைக் கடந்து சென்றனர். இன்றளவும் முடிவுறாமல் நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களால் ஹாங்காங்கில் இயல்பு நிலை முடங்கியுள்ளது.