புகைமூட்டத்தால் சரவாக்கில் 298 பள்ளிகள் மூடப்பட்டன

புகைமூட்டத்தால் சரவாக்கில் 298 பள்ளிகள் மூடப்பட்டன

1 mins read
956d284b-4790-4e2d-b4da-64f57b11fba6
-

மிரி, சரவாக் : சரவாக்கில் புகைமூட்டம் மோசமடைந்ததால், செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) காலை எட்டு மாவட்டங்களில் 298 பள்ளிகள் மூடப்பட்டன. இவற்றில் 245 தொடக்கப்பள்ளிகளும் 53 உயர்நிலைப்பள்ளிகளும் உள்ளடங்கும். இதனால் சுமார் 128,291 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

பள்ளிகள் மூடப்படும் அறிவிப்பை கல்வித்துறை செவ்வாய்க்கிழமை காலை வெளியிட்டதாக சரவாக் மாநில பேரிடர் நிவாரண நிர்வாகக்குழு தெரிவித்தது.

ஆரோக்கியமற்ற காற்றுத்தரத்தால் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்ட எட்டு மாவட்டங்கள் பிடொங், பாவ், கூச்சிங், லுபொக் அன்ட்டு, படாவான், சமரஹான், ஸ்ரீ அமான், லுண்டு ஆகியன.

ஸ்ரீ அமானில் காற்றுத்தரக் குறியீடு ஆக மோசமாக 359 ஆக இருந்தது. இது ஆபத்தான பிரிவைச் சேர்ந்த எண்ணிக்கை.

கூச்சிங் மாவட்டத்தில்தான் ஆக அதிகமான பள்ளிகள் மூடப்பட்டன.

காற்றுத்தரம் மோசமடைவதற்கு கலிமந்தானிலிருந்து வரும் புகைமூட்டமே பெரும்பாலும் காரணமாக இருந்தாலும், சரவாக்கின் சில இடங்களில் பற்றி எரியும் காட்டுத்தீயும் புகைமூட்டத்திற்குப் பங்களிக்கிறது.

சரவாக்கில் தினமும் சராசரியாக 20 காட்டுத்தீச்சம்பவங்கள் புகார் செய்யப்படுவதாக சரவாக் தீயணைப்பு, மீட்புப் பிரிவு தெரிவித்தது. கூச்சிங், ஸ்ரீ அமான், மிரி ஆகிய மாவட்டங்களில்தான் காட்டுத்தீச்சம்பவங்கள் ஆக அதிகமாக உள்ளன.