மகாதீர்: நான் இருக்கும்வரை அமைச்சரவை மாற்றங்கள் இருக்கப்போவதில்லை

மகாதீர்: நான் இருக்கும்வரை அமைச்சரவை மாற்றங்கள் இருக்கப்போவதில்லை

1 mins read
c7d5cc20-e1dc-4a96-96f0-6ce3c54d2995
-

மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது, தமது நிர்வாகத்தின்போது அமைச்சரவை மாற்றங்கள் செய்யப்படப்போவதில்லை என உறுதியளித்திருக்கிறார்.

தற்போதைய அமைச்சர்கள் அனைவரும் தத்தம் வேலைகளுக்குப் புதியவர்கள் என்பதை அவர் மலேசிய வானொலி நிலையம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது சுட்டினார்.

தற்போது கல்வியமைச்சராக இருக்கும் டாக்டர் மஸ்லீ மாலிக்கிற்குப் பதிலாக வேறொருவரை நியமிப்பது குறித்து யோசிப்பாரா எனக் கேட்கப்பட்டதற்கு டாக்டர் மகாதீர் "இல்லை" என உறுதியாகப் பதிலளித்திருந்தார்.

"புதியவரை அமைச்சராக நியமித்தால் அந்த வேலையை அவர் பழக வைப்பது எனக்கு மிகச் சிரமமாக இருக்கும். அவரும் அந்த வேலையைச் சிறப்பாகச் செய்யமாட்டார்," என்று அவர் தெரிவித்தார். புதிய அமைச்சர் ஒருவர் வந்தால் மட்டும் அனைத்தும் சீராகும் என்பதில்லை என்றார் டாக்டர் மகாதீர்.

தமக்குப் பிறகு புதிய பிரதமர் வரும்போது புதிய அமைச்சரவை அமைக்கப்படலாம் என்று அவர் தெரிவித்தார். ஆயினும், அத்தகைய மாற்றங்கள் நிகழும்போதெல்லாம் பிரச்சினைகள் தீர்வதில்லை என்றும் அதற்கு மாறாகப் புதிய பிரச்சினைகள் உருவாகின்றன என்றும் அவர் கூறினார்.

அதே பேட்டியில், தாம் இடைக்காலப் பிரதமர் தான் என்றும் வேறொருவருக்கு அந்தப் பொறுப்பைக் கொடுக்கப்போவதாக அளித்திருந்த வாக்குறுதியைக் கட்டிக்காப்பார் என்றும் டாக்டர் மகாதீர் மீண்டும் வலியுறுத்தினார். பெரிய பிரச்சினைகளில் பெரும்பாலானவற்றைத் தீர்த்த பிறகுதான் பிரதமர் பதவிலிருந்து வெளியேறுவார் என்று அவர் சொன்னார்.