போக்குவரத்து விதிமீறல்; காரில் தொங்கிய போலிசார்

இந்தோனீசியாவின் ஜகார்த்தாவில் காவலர் ஒருவர் கார் ஒன்றின் முன்புறக் கண்ணாடியின் மீது தொங்கியவாறு சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜாலான் புசார் மிங்கு ராயா பகுதியில் செப்டம்பர் 16ம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் சட்டவிரோதமாக கார் நிறுத்தப்பட்ட இடங்களை போலிஸ் அதிகாரி இப்ரிக் ஈகா செடியாவான் மற்றும் சவுத் ஜகார்த்தா   டிரான்ஸ்பொர்டேஷன் ஏஜென்சியைச் சேர்ந்த சில அதிகாரிகள் ஆகியோர் சோதனையிடச் சென்றனர்.  

அங்கு சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கருஞ்சாம்பல் நிற கார் ஒன்றை அணுகிய போலிசார் அதன் ஓட்டுநரான டவிபுதீனிடம் வண்டியின் ஆவணங்களைக் கோரினர்.
அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு நல்க மறுத்த அவர், அங்கிருந்து தப்ப முயற்சி செய்தார்.

அவ்விடத்திலிருந்து டவிபுதீன் தப்பிச் செல்வதைத் தடுக்க அதிகாரிகளுடன் சேர்ந்து திரு ஈகாவும் முயற்சி எடுத்தார். காரை அவ்விடத்திலிருந்து கிளப்ப  டவிபுதீன் முயற்சி செய்ததையடுத்து திரு ஈகா காரின் முன்புறக் கண்ணாடியைப் பற்றித் தொங்கினார்.
 

அதிகாரிகளின் கோரிக்கைகளை ஏற்காமல் அந்த நிலையிலேயே காரை ஓட்டிச் சென்ற டவிபுதீன், முன்புறம் இருந்த கார் ஒன்றின் மீது மோதிய பிறகே வாகனத்தை நிறுத்தினார்.
சுற்றியிருந்த பலர் இந்தச் சம்பவத்தை கைபேசிகளில் பதிவு செய்து இணையத்தில் பரப்பினர்.
 

திரு ஈகாவுக்கு காயம் ஏதுமில்லை என்று தெரிவித்த அதிகாரிகள்,  டவிபுதீன் மீது போக்குவரத்து விதிமீறல், போலிஸ் அதிகாரியின் சொல்லைக் கேளாதது ஆகிய பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.