சவூதி: கச்சா எண்ணெய் உற்பத்தி 10 நாட்களில் சரிசெய்யப்படும்

சவூதி: கச்சா எண்ணெய் உற்பத்தி 10 நாட்களில் சரிசெய்யப்படும்

1 mins read
14888c03-b70b-495e-94f2-bc948def70dd
கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ் -

ரியாத்: சவூதி அரேபிய கச்சா எண்ணெய் ஆலை உற்பத்தி 10 நாட்களில் மீட்டெடுக்கப்படும் என அந்நாட்டுப் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் கூறி உள்ளார்.

சவூதி எண்ணெய் ஆலை மீது கடந்த சனிக்கிழமை ஆளில்லா வானூர்தி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் சவூதியின் எண்ணெய் உற்பத்தி பாதியாகக் குறைந்தது. உலகிற்குத் தேவையான 10 விழுக்காடு கச்சா எண்ணெய் சவூதியில் உற்பத்தியாகும் நிலையில், இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து உலகளாவிய சந்தைகளில் எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்தது.

மூன்றில் இரண்டு பங்கு உற்பத்தி மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் 10 நாட்களில் ஆலை முழுமையாக மீட்கப்படும் என்றும் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் கூறியுள்ளார்.

இந்நிலையில், சவூதி வான் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு இளவரசர் முகம்மது ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த உரையாடலின்போது, எண்ணெய்க் கிடங்குகளில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் சவூதிக்கு மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக திரு மூன் குறிப்பிட்டார். இந்த பிரச்சினையை உலக நாடுகள் இணைந்து தீர்க்கவேண்டும் என அவர் தெரிவித்தார்.