இன்னும் ஓராண்டுக்குள் மலேசியாவின் பிரதமர் ஆகக்கூடிய வாய்ப்பு தமக்குக் கிட்டக்கூடும் என்று பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம், 72, தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டு மே மாத வாக்கில் பதவி மாற்றம் இருக்கக்கூடும் என்றும் இருப்பினும் எந்த மாதத்தில் அது நிகழும் என்பதில் தமக்கு உறுதி இல்லை என்றும் கோலாலம்பூரில் புளூம்பர்க் தொலைக்காட்சியிடம் நேற்று திரு அன்வார் கூறினார்.
பிரதமராக மகாதீர் முகம்மது பொறுப்பேற்ற ஈராண்டு காலத்திற்குப் பிறகு பதவி மாற்றம் இருக்குமா என்று தொலைக்காட்சி நிருபர் கேட்டதற்கு அவர் இவ்வாறு பதில் கூறினார்.
"உரிய நேரத்தில் அவர் (டாக்டர் மகாதீர்) பதவி விலகுவார் என்பதும் நான் அந்தப் பதவியில் அமர்வேன் என்பதும் ஏற்கெனவே உள்ள உடன்பாடு," என்றார் திரு அன்வார்.
மலேசியாவின் அடுத்த பிரதமராக பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி அல்லது டாக்டர் மகாதீரின் மகன் முக்ரிஸ் மகாதீர் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகின்றனவா என்றும் திரு அன்வாரிடம் கேட்டபோது அந்தக் கருத்தை அவர் மறுத்தார்.
"எந்தவோர் அரசியல் கட்சியும் அந்தப் பதவிக்குப் பெயரைப் பரிந்துரை செய்ததற்கான அறிகுறி இதுவரை இல்லை. அப்படி எதுவும் நடப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவரவர் சொந்த ஆசைக்கு தடை ஏதும் இல்லை.
"இது எனக்கு சற்று பொருத்தமற்றதாகத் தெரிகிறது. இது குறித்து விவாதிக்கப்பட்டதா என்பதற்கு என்னிடம் பதில் இல்லை," என்றார் அவர்.
கடந்த ஆண்டு மே மாதம் டாக்டர் மகாதீர் தலைமையிலான பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி வியப்புக்குரிய வகையில் ஆட்சியைக் கைபற்றியது முதலே அன்வார் இப்ராகிம் எப்போது பிரதமர் பொறுப்பை ஏற்பார் என்ற வினா நீடித்து வருகிறது.
பிரதமர் மகாதீரும் அது குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வந்துள்ளார். நாட்டின் நிலைமை சரியானதும் பிரதமர் பொறுப்பில் இருந்து தாம் இறங்குவது உறுதி என்றும் அதற்கு இரண்டு அல்லது மூன்றாண்டு காலம்கூட ஆகலாம் என்றும் அண்மையில் டாக்டர் மகாதீர், 94, கூறியிருந்தார்.
மேலும் தாம் பிரதமராக நீடிக்கும் வரை அமைச்சரவையில் எந்தவொரு மாற்றமும் செய்யப்
போவதில்லை என்று அவர் நேற்று முன்தினம் தெரிவித்தார். மக்கள் மத்தியில் சில அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி நிலவுகிறபோதிலும் தாம் அவர்களை இப்போதைக்கு மாற்றும் எண்ணம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஒருவேளை திரு அன்வார் அடுத்த ஆண்டு மே மாதம் மலேசியப் பிரதமராகப் பொறுப்பு ஏற்றால் 14வது பொதுத் தேர்தல் முடிந்த ஈராண்டில் அந்தப் பதவி மாற்றம் நிகழ்ந்ததாக அமையும்.

