சவூதி அரசின் எண்ணெய்த் துறைக்கே வேட்டு வைக்கும் வகையில் நடந்த தாக்குதலை அடுத்து, தற்காத்துக் கொள்ளும் சவூதி அரேபியாவின் உரிமைக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கும் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பொம்பியோ கூறியுள்ளார்.
ஜெட்டாவில் நேற்று சவூதி அரசின் தற்காப்பு அமைச்சரும் பட்டத்து இளவரசருமான முகம்மது பின் சல்மானைச் சந்தித்ததை அடுத்து பொம்பியோ இவ்வாறு டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
சவூதி அரசுக்குச் சொந்தமான அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் இரு வளாகங்களில் நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி தாக்குதல்களை, 'போர் தொடுப்பதற்கான ஓர் அறிகுறி' என்று பொம்பியோ வருணித்து இருந்தார்.
சேதமடைந்த ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி பாகங்களை நேற்று செய்தியாளர் கூட்டத்தின்போது காட்சிக்கு வைத்தது சவூதி அரேபியா.
அவை ஈரானுக்குச் சொந்தமான ஆயுதங்கள் என்று ராணுவப் பேச்சாளர் ஒருவர் அடையாளம் கண்டிருந்தார்.
ஈரானின் ஆதரவுடன் இத்தாக்குதல் நடந்துள்ளது என்பதற்கு மேலும் பல ஆதாரங்கள் கூட்டத்தில் பகிரப்பட்டன.
ஆளில்லா வானூர்தி ஒன்று வட திசையிலிருந்து வருவது போன்ற ஒரு கண்காணிப்புக் காணொளி காட்டப்பட்டது. சவூதி அரேபியாவுக்குத் தெற்கே அமைந்துள்ளது ஏமன்.
மொத்தம் 18 ஆளில்லா வானூர்திகளும் ஏழு ஏவுகணைகளும் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே தாக்குதலுக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி வருகிறது ஈரான்.
ஆனால் தான் குறி வைக்கப்பட்டால் உடனே எதிர் நடவடிக்கை எடுக்கும் என்று அது அமெரிக்காவை எச்சரித்துள்ளது.
ஈரான் ஆதரவளித்து வரும் ஹுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை நடத்தியதாக முன்னர் தெரிவிக்கப்பட்டும், ஈரான்தான் தாக்குதலின் பின்னால் உள்ளது என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில் தாக்குதல்களை 'முன் எப்போதும் இல்லாத அளவு' என்று வருணித்த பொம்பியோ, தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமையுள்ள சவூதி அரேபியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா இருக்கும் என்று டுவிட் செய்தார். அத்துடன் ஈரானின் மிரட்டலான நடத்தையை ஒருபோதும் பொருட்படுத்தாது என்றும் பொம்பியோ கூறியிருந்தார்.
இத்தாக்குதல் ஈரானிய தலைவர் ஆயத்துல்லா அலி காமெய்னியின் ஒப்புதலுடன் நடந்ததாக 'சிபிஎஸ் நியூஸ்' தகவல் நேற்று முன்தினம் வெளியிட்டது. இத்தகவல் பெயர் குறிப்பிடப்படாத ஓர் அமெரிக்க அதிகாரி அளித்தது என்றும் செய்தி நிறுவனம் கூறியது.
ரானுக்கும் இத்தாக்குதலுக்கும் தொடர்பு இல்லை என்ற வகையில் தாக்குதலை நடத்தும் நிபந்தனையுடன் காமெய்னி ஒப்புதல் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

