புகைமூட்டத்தால் உணவு விநியோக நிறுவனங்களுக்குக் கொண்டாட்டம்

புகைமூட்டத்தால் உணவு விநியோக நிறுவனங்களுக்குக் கொண்டாட்டம்

1 mins read
51b7b6cf-943f-4d06-8b36-beb99182eb79
(படம்: Supersilly chef) -

சுவையான பல இன உணவு வகைகளுக்குப் பெயர்போன பினாங்கு மாநிலத்தில், புகைமூட்டத்தால் அதிகமானோர் உணவகங்களுக்குச் செல்லாமல் உணவு விநியோக நிறுவனங்களின் சேவையை நாடுகின்றனர்.

பினாங்கின் மிகப் பிரபலமான உணவகங்களில் ஒன்றான நாசி கண்டார் லைன் கிளையர், புகைமூட்டத்தால் வாடிக்கையாளரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. வழக்கமாகக் கூட்டம் நிரம்பியிருக்கும் இடத்தில் இப்போது காலியான மேசைகளும் ஒரு சில வாடிக்கையாளர்களும் இருப்பதைத்தான் காண முடிகிறது.

"காலை மணி 11 ஆகிறது. வழக்கமாக வரும் வாடிக்கையாளர்கள் வரவில்லை. அரசாங்கத்தின் ஆலோசனைக்குச் செவிசாய்க்கும் மக்கள் உணவகங்களுக்கு வராமல் வீட்டிலேயே பொட்டல உணவுக்காக உணவு விநியோகிப்பாளர்களை நாடுகின்றனர். இது எங்கள் வியாபாரத்திற்கு நல்லதல்ல" என்கிறார் அந்த உணவகத்தின் உரிமையாளர் சாஹுபர் அலி இன்சாமினா முகம்மது ஹனிபா.

'வெல்ட் குவே ஓ கியோ' இனிப்புப் பண்ட உணவுக் கடையின் உரிமையாளர், புகைமூட்டத்தால் தமது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 40 விழுக்காடு குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், உணவு விநியோக நிறுவனங்களின் வியாபாரம் சூடுபிடித்திருக்கிறது. 'டிலிவர்ஈட்' உணவு விநியோக நிறுவனம், தனது அன்றாட வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகத் தெரிவித்தது.

புகைமூட்டத்தால் 8,000 ஆக இருந்த அன்றாட வாடிக்கையாளர் முன்பதிவு எண்ணிக்கை 11,000க்கு உயர்ந்திருப்பதாக 'டிலிவர்ஈட்' நிறுவனத்தின் இணை நிறுவனர் தெரிவித்தார். ஆரோக்கிய உணர்வுடன் இருக்கும் பலர், தங்களை அபாயத்திற்குள்ளாக்க விரும்பவில்லை என அவர் கூறினார்.