சரவாக்கில் அபாயகரமான நிலையை எட்டிய புகைமூட்டம்; செயற்கை மழைக்கு முயற்சி

மலேசியாவின் சரவாக் மாநிலம், ஸ்ரீ அமானில் காற்றுத் தரக் குறியீடு நேற்று அபாயகரமான அளவான 400ஐத் தாண்டியது.

காலை 8 மணிக்கு 402ஆக இருந்த காற்றுத் தரக் குறியீடு, 10 மணிக்கு 420ஆக உயர்ந்து, பின் பிற்பகல் 2 மணிக்கு 412, இரவு 8 மணிக்கு 404 என சற்றே குறைந்தது.

இதையடுத்து, சரவாக்கில் புகைமூட்டத்தின் தாக்கத்தைக் குறைக்கும் நோக்கில் அங்கு செயற்கையாக மழை பொழிய வைப்பதற்கான முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டன. இதற்காக, ஆளில்லா வானூர்திகளைப் பயன்படுத்துவது குறித்தும் மலேசிய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகக் கூறப்பட்டது.

புகைமூட்டம் காரணமாக சரவாக்கில் 1,037 பள்ளிகள் உட்பட நாடு முழுவதும் 2,600க்கும் மேற்பட்ட பள்ளிகள் நேற்றும் மூடப்பட்டன. 

நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக மலேசிய கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே, சரவாக்கில் 500,000 உட்பட நாடு முழுவதும் 2.1 மில்லியன் முகக் கவசங்களை விநியோகித்துள்ளதாக மலேசியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை முகவை தெரிவித்துள்ளது.

காற்றுத்தரம் மோசமாக இருந்ததால் ஈப்போவின் சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையத்தில் நேற்று  முற்பகலில் ஆறு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் கிட்டத்தட்ட 800 பயணிகள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், காலையில் அங்கு பெய்த கனமழையால் புகைமூட்டம் மட்டுப்பட்டது. இதையடுத்து, நண்பகல் 12.20 மணியில் இருந்து விமான சேவைகள் வழக்க நிலைக்குத் திரும்பியதாக அந்த விமான நிலையத்தின் மேலாளர் முகம்மது அலி ஒஸ்மான் தெரிவித்தார்.

இந்தோனீசியா விசாரணை

இதற்கிடையே,  சுமத்ரா, கலிமந்தான் பகுதிகளில் சட்டவிரோதமாக காட்டுத் தீ ஏற்படுத்தப்பட்டதா என்று இந்தோனீசிய போலிசார் விசாரித்து வருகின்றனர். அவ்விரு தீவுகளில் உள்ள காட்டுப் பகுதிகளில் தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் 230 நிறுவனங்களின் பெயர்கள் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டன. இந்நிலையில், நேற்று மேலும் 19 நிறுவனங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டன.

அந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான பகுதிகளில் போலிஸ் சோதனையிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.