பேங்காக்: தாய்லாந்தின் புக்கெட் தீவின் ரிசோர்ட்டில் கடந்த ஆகஸ்ட்டில் சிங்கப்பூர் பெண் ஒருவரின் கணவர் அமித்பால் சிங் பஜாஜ் என்பவரை நார்வேயைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் சுட்டுக் கொன்றுவிட்டு தாய்லாந்தை விட்டு தப்பியோடிவிட்டார்.
அவரைக் கைது செய்வதற்கு தாய்லாந்து அரசாங்கம் இன்டர்போல் எனப்படும் அனைத்துலகப் போலிசின் உதவியை நாடியுள்ளது.
நார்வே நாட்டைச் சேர்ந்த ரோஜர் புல்மன் என்ற அந்த ஆடவரைச் சரணடையுமாறு இன்டர்போல் அறிவிப்பாணை பிறப்பித்துள்ளது.
கொலையாளி என்று நம்பப்படும் 53 வயது புல்மன் செப்டம்பர் 2ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.
ஆனால் அவர் அதற்கு முன்னர் நாட்டைவிட்டுத் தப்பியோடி விட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த ஆடவர் தாய்லாந்தில் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் சம்பவம் நடந்த புக்கெட் தீவு முழுக்க தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டதாக வும் தாய்லாந்து போலிசார் கூறினர்.
நோக்கமில்லாக் கொலையின்பேரில் குற்றம் சாட்டப்பட்ட புல்மன்னுக்கு புக்கெட் மாநில நீதிமன்றம் ஆகஸ்ட் 26ஆம் தேதி பிணை வழங்கியது.
பிணையில் இருக்கும்போது புல்மன் தப்பியோடியதால் அவரைக் கைது செய்ய புக்கெட் வட்டார நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புல்மனுக்கு நீதிமன்றம் பிணை அளித்ததற்கு லண்டனில் உள்ள திரு அமித்பாலின் குடும்பத்தினர், அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
"ஒரு கொலைக் குற்றவாளியை புக்கெட் தெருக்களில் நடமாட அதிகாரிகள் ஏன் அனுமதி அளித்தனர் என்று தெரியவில்லை.
"இதுபோன்ற குற்றவாளி மற்ற அப்பாவி மக்களுக்கு மிரட்டலாக இருப்பார்," என்றும் திரு அமித் பாலின் குடும்பத்தினர் தெரிவித்தனர். அமித்பால் சிங் பஜாஜ், ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று தன் மனைவியுடன் புக்கெட் தீவின் ஹோட்டல் அறை ஒன்றில் இருந்தபோது புல்மன் திடீரென நுழைந்து அவரைத் தாக்கினார்.
நள்ளிரவில் புல்மன் தனது அறையில் சத்தமாகப் பாடியது பற்றி திரு பஜாஜ் ஹோட்டல் பணியாளர்களிடம் புகார் செய்ததை அடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.
அந்தச் சண்டையில் அமித்பால் சிங் கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது.

