மலேசியாவில் பெரிய அளவில் போதைப்பொருள் சிக்கியது

ஜார்ஜ்டவுன்: மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் 12 டன் எடை கொண்ட கொக்கேன்   எனும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதன் மதிப்பு $791 மில்லியன்.   இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் மலேசியாவில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

60 டன் எடை கொண்ட கரித்துண்டுகளுடன் கொக்கேன் போதைப்பொருள் கலந்து வைக்கப்பட்டிருந்தது.

பினாங்கு வாயிலாக வேறோர் இடத்துக்கு  அந்தப் போதைப்

பொருளை அனுப்ப அனைத்துலகப் போதைப்பொருள் கடத்தல் கும்பல் முயன்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் பினாங்கு வந்தடைந்திருப்பது கவலை அளிப்பதாக மலேசிய போலிஸ் படைத் தலைவர் அப்துல் ஹமீது படோர் தெரிவித்தார்.

“கரித்துண்டுகளுடன் கலந்து வைக்கப்பட்ட போதைப்பொருளைக் கொண்ட சாக்குகள் கடந்த மாதம் 16ஆம் தேதி பினாங்கு துறைமுகத்தை வந்தடைந்தன. 

“சாக்குகளில் உள்ள போதைப்பொருளை அதிகாரிகள் கண்டுபிடிக்காமல் இருக்க உயர்தர தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மோப்ப நாய்களாலும் போதைப்பொருளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 

ஆனால் எங்களது ரசாயனப் பிரிவு அதைக் கண்டுபிடித்துவிட்டது.

“போதைப்பொருள் கடத்தலுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்ததாக சந்தேகிக்கப்படும் 29 வயது நபர் கடந்த 14 நாட்களாக விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்,” என்றார் திரு அப்துல் ஹமீது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த சந்தேக நபருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.