மலேசியாவின் பிரதமர் அலுவலகத் துணை அமைச்சரும் ஜோகூரின் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் முகம்மது பாரிட் முகம்மது ரஃபிக் (படம்) நேற்று மரணமடைந்தார். இவருக்கு வயது 43.
இந்நிலையில், ஆளும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியும் புதிய அம்னோ-பாஸ் கூட்டணியும் பொருதுவதற்கான இடைத்தேர்தலுக்கு இப்போது வழிவிடப்பட்டுள்ளது.
மருத்துவரான டாக்டர் ஃபாரிட் மாரடைப்பால் மரணமடைந்திருக்கலாம் என மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதுடன் இவர் அணுக்கமாகப் பணியாற்றி வந்தார்.
கடந்த ஆண்டு 14வது மலேசிய பொதுத் தேர்தலில் நிலவிய மும்முனைப் போட்டியில் பெர்சாத்து கட்சியின் வேட்பாளராக டாக்டர் ஃபாரிட் போட்டியிட்டு தேசிய முன்னணி, பாஸ் கட்சி வேட்பாளர்களை 524 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய முன்னணியும் பாஸ் கட்சியும் இணைந்து பணியாற்ற அண்மையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில், இன்னும் ஒரு சில வாரங்களில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி கடுமையான போட்டியை எதிர்பார்க்கலாம் என அரசியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
டாக்டர் ஃபாரிட்டின் மரணச் செய்தியை அறிந்தவுடன், ஜோகூரில் அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக சைபர்
ஜெயாவில் நேற்று தாம் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாதியிலேயே பிரதமர் மகாதீர் விடைபெற்றுக்கொண்டதாக தி ஸ்டார் இணையத்தளம் குறிப்பிட்டது.
கோலாலம்பூரில் நேற்று முன்
தினம் டாக்டர் ஃபாரிட்டுடன் வெள்ளிக்கிழமை தொழுகையில் டாக்டர் மகாதீர் கலந்துகொண்டதாக அவரது உதவியாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஜோகூரிலுள்ள பொந்தியான் மருத்துவமனையில் நேற்று காலை 6 மணியளவில் டாக்டர் ஃபாரிட் காலமானார்.

