வியட்னாமிய படகைத் தடுத்து வைத்த மலேசியா

வியட்னாமிய படகைத் தடுத்து வைத்த மலேசியா

1 mins read

கோலாலம்பூர்: மலேசிய நீர்நிலையில் அத்துமீறிச் சென்றதற்காக வியட்னாமிய மீன்பிடி படகு ஒன்று மலேசிய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. படகில் இருந்தோரை அதிகாரிகள் கைது செய்வதை வியட்னாமிய அதிகாரிகள் தடுக்க முயன்றும் வெற்றிகரமாக படகைக் கைப்பற்றியதாக நேற்று மலேசிய கடல்துறை அமலாக்கத் துறையின் இப்ராகிம் முகம்மது தெரிவித்தார்.

தெரெங்கானு பகுதியருகே உள்ள நீர்நிலையில் இச்சம்பவம் சென்ற புதன்கிழமையன்று காலை 9.48 மணிக்கு நடந்தது. மலேசிய எல்லைக்குள் அத்துமீறு மீன் பிடிக்க வந்ததற்காக மலேசிய கடல்துறை அமலாக்கத் துறை வியட்னாமிய படகை நெருங்கியது. அப்படகு ஆபத்தான முறையில் செல்லத் தொடங்கியது. அத்துடன் படகில் இருந்த மீனவர்களை மலேசிய அதிகாரிகள் கைது செய்வதைத் தடுக்க, வியட்னாமிய அதிகாரிகளின் இடையே வர முயற்சி செய்தது.

அப்போது வியட்னாமிய அதிகாரிகளின் கப்பலும் அபாய முறையில் மலேசிய கப்பலின் அருகே திரும்பியதாகக் கூறப்பட்டது. மலேசிய நீர்நிலைக்குள் மீன்பிடிக்க வந்தது சட்டவிரோதச் செயல் என்பதால் படகை மலேசிய அதிகாரிகள் தடுத்து வைத்தனர்.

படகில் இருந்த மூன்று மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் 700,000 ரிங்கிட் (S$230,000) மதிப்புடைய 9,000 லீட்டர் எண்ணெய்யும் மீன்பிடிச் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மீன் பிடிப்பதற்கான உரிமமும் முறையான அடையாள பத்திரங்களும் இல்லாததன் தொடர்பில் மீனவர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இரு நாட்டு அதிகாரிகளும் இதன் தொடர்பில் கூடுதல் பேச்சுவார்த்தை நடத்த அடுத்த வாரம் சந்திக்க உள்ளதாகக் கூறப்பட்டது.