ஹாங்காங்: அரசாங்கத்தை எதிர்த்து ஹாங்காங்கில் போராடி வருபவர்கள் நேற்று இரு பெருவிரைவு ரயில் நிலையங்களுக்குள் நுழைந்து, பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியதால் அவ்விரு நிலையங்களும் நேற்றுப் பிற்பகலில் மூடப்பட்டன.
சிங் யி, ஷா டின் என்ற அவ்விரு நிலையங்களிலும் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அங்கிருந்த பயணிகள் உடனடியாக அவ்விடத்தைவிட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
ஷா டின் வட்டாரத்தில் உள்ள நியூ டவுன் பிளாசா எனும் கடைத்தொகுதியையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் விட்டுவைக்கவில்லை. சிறுவர்கள், பெரியவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் அங்கு திரண்டு, ஹாங்காங்கிற்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.
அவர்களில் சிலர் சீனாவின் தேசிய கொடியையும் கீழே போட்டு மிதித்ததாகக் கூறப்பட்டது. முந்தைய நாள் இரவு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலிசுக்கும் இடையே மோதல் மூண்டது. அதேபோல சீன ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராகக் களமிறங்கினர்.
விமான நிலையத்திற்குச் செல்லும் சாலைகளிலும் தடைகளை ஏற்படுத்தியதோடு, விமான நிலையத்தின் வருகைக்கூடத்தையும் ஆக்கிரமித்தனர்.
சந்தேகப் பேர்வழிகளைச் சீனாவிற்குக் கொண்டு சென்று விசாரிக்க வகைசெய்யும் சட்ட மசோதாவிற்கு எதிராகத் தொடங்கிய போராட்டம் 16வது வாரயிறுதியாகத் தொடர்ந்தது. அந்த மசோதா திரும்பப்பெறப்பட்டபோதும் தங்களது மற்ற கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்கும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறிவருகின்றனர்.

