ஈப்போ: தெரியாத சில ஆடவர்கள் தனது காரை அடித்து நொறுக்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஒரு மாது சம்பவ இடத்திலேயே மயங்கிவிழுந்து உயிரிழந்தார்.
மலேசியாவின் ஈப்போ நகரிலுள்ள புந்தோங் புறநகரப் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்தபோது தனது தாயாரும் மூன்று தங்கைகளும் வீட்டில் இருந்ததாக உயிரிழந்த 44 வயது எம். அபிராமியின் மகன் என்.நினேஸ்வரன் தெரிவித்தார். தாமும் தமது தந்தையும், இரண்டு சகோதரர்களும் வீட்டில் இல்லாத சமயத்தில் முரடர்கள் கும்பலாக மோட்டார் சைக்கிளில் இரவு சுமார் ஏழு மணிக்கு வந்ததாக அவர் கூறினார்.
காரை இவர்கள் சேதப்படுத்தியதை நேரில் கண்டு பதற்றமடைந்த அவரது தாயார், மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு உடனே கொண்டுசெல்லப்பட்ட அவர் உயிரிழந்ததை அங்குள்ள ஒரு மருத்துவர் உறுதி செய்ததாக 'த ஸ்டார்' பத்திரிகை தெரிவித்தது,
மருத்துவமனையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருந்த நேரத்தில், தங்களது வீடு தீயிலிட்டுக் கொளுத்தப்பட்டதாக அண்டை வீட்டார் ஒருவர் தொலைபேசி வழி தம்மிடம் கூறியதாக 29 வயது நினேஸ்வரன் கூறினார்.
இவ்வாறு செய்தவர்கள் யார், எந்த நோக்கத்துடன் தாக்கினர் என்ற கேள்விகளுக்குத் தம்மிடம் பதில் இல்லை என்கிறார் நினேஸ்வரன்.
இறந்த திருவாட்டி அபிராமியின் இறுதிச் சடங்குக்கான செலவுகளைத் தாம் ஏற்பதாக புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சிவசுப்ரமணியம் தெரிவித்தார்.

