கர்ப்பிணியின் கருவை தவறுதலாகக் கலைத்த மருத்துவர்

1 mins read
188835f8-d4a7-4efc-8e01-731a951f6b0d
பெண்ணின் தகவல்களைச் சரிவர கவனிக்காமல்  கர்ப்பிணிக்குத் தாதி ஒருவர் மயக்க ஊசி போட்டதாகவும், அதனைத் தொடர்ந்து மகப்பேறு மருத்துவர் கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்பட்டது. கோப்புப்படம் -

சத்து ஊசி போட்டுக்கொள்வதற்காக மகப்பேறு அறைக்குள் நுழைந்த கர்ப்பிணி ஒருவருக்குத் தவறுதலாகக் கருக்கலைப்பு சிகிச்சை செய்த மகப்பேறு மருத்துவர், தாதி ஆகியோர் மீது சோல் கேங்சியோ காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வியட்னாமைச் சேர்ந்த மாது ஒருவர் ஆறு வார கர்ப்பத்துடன் கடந்த மாதம் 7ஆம் தேதி மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றார். அவருக்குச் சத்து ஊசி போட மருத்துவர் பரிந்துரைத்ததை அடுத்து அவர் மகப்பேறு அறைக்குச் சென்றார். அதே அறையில்தான் ஊசி போடுதல், அறுவை சிகிச்சை போன்றவையும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. பெண்ணின் தகவல்களைச் சரிவர கவனிக்காமல் கர்ப்பிணிக்குத் தாதி ஒருவர் மயக்க ஊசி போட்டதாகவும், அதனைத் தொடர்ந்து மகப்பேறு மருத்துவர் கருக்கலைப்பு செய்ததாகவும் கூறப்பட்டது. வேறொரு பெண்ணுக்குச் செய்ய வேண்டிய கருக்கலைப்பு சிகிச்சை இந்தப் பெண்ணுக்குச் செய்யப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து போலிசில் புகார் அளிக்கப்பட்டது. பெண்ணின் விருப்பமின்றி கருக்கலைப்பு செய்யப்பட்டது கருத்தில் கொள்ளப்பட்டாலும், மயக்க நிலையில் இருந்ததால் அந்தப் பெண் சம்மதம் தெரிவிக்கவுமில்லை, மறுக்கவுமில்லை என்ற அடிப்படையில் மருத்துவரையும் தாதியையும் கைது செய்ய முடியாத நிலை இருப்பதாக போலிஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, தென்கொரியாவில் கருக்கலைப்பு சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்