பாப்புவா கலவரத்தில் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது

பாப்புவா கலவரத்தில் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது

2 mins read
f6607138-30e5-40df-bacf-ef49654b6042
இந்தோனீசியாவின் பாப்புவா வட்டாரத்தைச் சேர்ந்த வாமெனா பகுதியில் அரசாங்கக் கட்டடங்களுக்கு வன்முறையாளர்கள் தீ வைத்தனர். அதனையடுத்து புகைமண்டலமாகக் காட்சி தரும் அப்பகுதியை விட்டு வெளியேறும் மக்கள். படம்: இபிஏ -

வாமெனா: இந்தோனீசியாவின் பாப்புவா வட்டாரத்தில் கட்டுப்படுத்த முடியாத வகையில் வன்முறை தலைவிரித்தாடுகிறது. நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் வன்முறையாளர்கள் கட்டடங்களுக்குத் தீ வைத்தனர்.

அப்போது அக்கட்டடங்களில் வசித்தவர்கள் உயிருடன் பற்றி எரிந்த சம்பவத்தால் இனக்கலவரமாக வெடித்தது.

பாப்புவா நியூகினி தீவின் மேற்குப் பகுதியில் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடந்து வருகிறது.

தன்னாட்சி கோரிக்கையை முன்வைத்து அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

வாமெனா நகரில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் அங்கிருந்த அரசாங்கம் மற்றும் தனியார் கட்டடங்களுக்குத் தீ வைத்தனர். அதில் 22 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். மேலும் பல கட்டடங்களுக்குத் தீ வைக்கப்பட்டதில் இதுவரையில் பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளதாகவும் 70க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

700க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக ராணுவப் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

போராட்டக்காரர்கள் அப்பகுதியைச் சேர்ந்த மக்களில் சிலரை தீ வைத்துக்கொளுத்தியதாகவும், சிலரை அடித்துக் கொன்றதாகவும், சிலரை நெருப்பில் தள்ளிவிட்டுக் கொன்றதாகவும் அந்த ராணுவப்பேச்சாளர் கூறினார்.

மேலும் தீ வைக்கப்பட்ட கடைகள், உணவங்காடிகளில் எத்தனை பேர் இறந்து கிடக்கின்றனர் என்பது பற்றி தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் முக்கால்வாசிப்பேர் தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று ராணுவத் தளபதி சந்திர டியன்ட்டோ, ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

பள்ளி ஆசிரியர் ஒருவர், மாணவர் ஒருவரை இனரீதியாக தரக்குறைவாகப் பேசியதை அடுத்து இந்தக் கலவரம் வெடித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானோர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் என்று தெரிகிறது.

இந்தக் கலவரத்தில் இருந்து தப்பிப்பதற்காக குழந்தைகள், முதியோர் என 4,000க்கு மேற்பட்ட குடியிருப்பாளர்கள் ராணுவத் தளம் மற்றும் போலிஸ் நிலையங்கள், அரசாங்கக் கட்டடங்கள், தேவாலயங்கள் போன்ற இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.