லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்குச் சில வாரங்கள் மட்டும் எஞ்சியிருக்கும்போது பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தை முடக்கி வைக்குமாறு பிரிட்டிஷ் அரசியிடம் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆலோசனை வழங்கியது சட்டவிரோதமானது என அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
"நாடாளுமன்றத்தைக் கலைக்காமல் முடக்கி வைக்க அரசிக்கு ஆலோசனை வழங்க எடுக்கப்பட்ட முடிவு சட்டவிரோதமானது. சரியான காரணம் ஏதும் தராமல் நாடாளுமன்றம் செயல்படுவதைத் தடுப்பதாகும்," என்று உச்ச நீதிமன்றத்தின் தலைவர் பிரென்டா ஹேல் தெரிவித்தார்.
இந்தத் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தின் 11 நீதிபதிகளாலும் ஏகமனதாக அளிக்கப்பட்டது.
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து நாடாளுமன்ற நாயகரும் மேலவை நாயகரும் முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிபதி ஹேல் கூறினார்.
இம்மாதம் 10ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை பிரிட்டிஷ் நாடாளுமன்றம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஜான்சனின் ஆலோசனையைக் கேட்டு பிரிட்டிஷ் அரசி எலிசபெத் அதற்கு ஒப்புதல் அளித்திருந்தார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்ற நாடாளுமன்ற நாயகர் ஜான் பெர்கோ, நாடாளுமன்றம் உடனடியாகக் கூட வேண்டும் எனக் கூறினார். இதற்காக கட்சித் தலைவர்களை உடனடியாகச் சந்தித்துப் பேச இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, பிரதமர் பதவியிலிருந்து விலகுவது குறித்து போரிஸ் ஜான்சன் பரிசீலனை செய்ய வேண்டும் என்று தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரமி கோர்பி கூறினார்.
திரு ஜான்சன் எடுத்த முடிவு சட்டவிரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு நாட்டின் பிரதமரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
திரு ஜான்சன் பிரிட்டனின் ஆகக் குறுகிய காலப் பிரதமர் என வரலாறு சொல்ல வேண்டும் என்று கூறிய திரு கோர்பி, புதிய அரசாங்கத்தை அமைக்க தமது கட்சி தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

