ஜகார்த்தா: திருமணத்திற்குப் பிந்திய கள்ள உறவுக்குத் தடைவிதிப்பது உட்பட இந்தோனீசிய அரசு முன்மொழிந்துள்ள புதிய சட்டத் திருத்தங்களுக்கு எதிராக தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று மூன்றாவது நாளாக மாணவர்கள் சாலைகளில் இறங்கிப் போராடினர்.
ஜகார்த்தாவிலும் இன்னொரு நகரிலும் நேற்று முன்தினம் போராட்டம் நடத்திய மாணவர்களை போலிஸ் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் தண்ணீரைப் பீய்ச்சி
அடித்தும் கலைக்க முயன்றது. அப்போது நடந்த மோதலிலும் கல்வீச்சிலும் 265 மாணவர்களும் 39 போலிசாரும் காயமடைந்ததாக ஜகார்த்தா போலிஸ் தலைவர் கட்டோட் எட்டி பிரமோனோ தெரிவித்தார்.
பெட்ரோல் குண்டுகளை வைத்திருந்தவர்கள் உட்பட மொத்தம் 94 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து, புதிய குற்றவியல் நடைமுறைத் தொகுப்பு மீதான நாடாளுமன்ற விவாதத்தை அடுத்த மாதத்திற்குத் தள்ளி வைப்பதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று அதிபர் ஜோக்கோ விடோடோ அறிவித்தார்.
திருமணத்திற்குப் பிந்திய கள்ள உறவு, அதிபரின் கண்ணியத்தை அவமதித்தல் ஆகிய குற்றங்களுக்கு அபராதம், மருத்துவ அவசரநிலை அல்லது பாலியல் வன்முறை தவிர்த்த சூழ்நிலைகளில் கருக்கலைப்பு செய்தால் நான்காண்டு சிறை, குறளி வித்தைக்குச் சிறை உள்ளிட்ட சட்டத் திருத்தங்கள் புதிய குற்றவியல் நடைமுறைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
இதனிடையே, போராட்டங்களில் மாணவர் அல்லாத அமைப்புகளின் பங்கு குறித்தும் விசாரிக்கப்பட்டு வருவதாக திரு பிரமோனோ தெரிவித்தார்.
புதிய குற்றவியல் நடைமுறைத் தொகுப்பு மட்டுமின்றி, ஊழல் தடுப்பு அமைப்பு தொடர்பான சட்டங்களில் செய்யப்படும் மாற்றங்களை எதிர்த்தும் தாங்கள் போராடுவதாக மாணவர்கள் கூறிவருகின்றனர். அத்துடன், புகைமூட்டத்திற்குக் காரணமான காட்டுத் தீச்சம்பவங்களைக் கட்டுப்படுத்தவும் மனித உரிமைப் பிரச்சினைகளுக்காகவும் அவர்கள் போராடி வருகின்றனர்.
சுலவேசியின் கோரோன்டலோ, ஜாவாவின் சுரபாயா ஆகிய நகரங்களிலும் மாணவர்கள் நேற்று போராட்டத்தில் இறங்கினர்.
இதையடுத்து, மாணவர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று நாடாளுமன்ற நாயகர் பம்பாங் சோசத்யோ கேட்டுக்கொண்டுள்ளார்.

