நியூயார்க்: மியன்மாரில் இருந்து மில்லியனுக்கு மேற்பட்ட ரோஹிங்யா மக்கள் வெளியேறி மலேசியா, பங்ளாதேஷ் போன்ற அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், அந்த நெருக்கடியைத் தீர்க்கத் தவறிவிட்டதாக ஐக்கிய நாடுகள் மன்றத்தையும் மியன்மார் அரசாங்கத்தையும் மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது கடுமையாகச் சாடியுள்ளார்.
ரோஹிங்யா விவகாரத்தில் ஐநா அமைதியாக இருந்ததைப் பார்க்கும்போது 'செவிடன் காதில் ஊதிய சங்கு'போல் ஆகிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், மனிதர்களால் நிகழ்த்தப்பட்ட அத்தகைய அட்டூழியங்களைத் தடுக்கத் தவறியதால் 75 ஆண்டுகால வரலாறு கொண்ட அந்த உலக அமைப்பின் நோக்கம் நிறைவேற்றப்படவில்லை என்றும் டாக்டர் மகாதீர் சொன்னார்.
ஐநா பொதுச் சபையில் நேற்று முன்தினம் உரையாற்றிய அவர், மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் நிகழ்த்தப்பட்டது இன அழிப்பு என்றும் அந்த நெருக்கடியைத் தீர்த்து, குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த ஐநாவும் மற்ற நாடுகளும் தங்களது பங்கை ஆற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

