இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது. இந்தப் பேரிடரில் ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால் மக்களிடம் பதற்றம் தணிந்துள்ளதாகக் கூறப்
படுகிறது.
ரிக்டர் அளவுகோலில் 5.8ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தில் மிர்பூர் நகரத்தை ஒட்டிய கிராமப் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டன. பழைய வீடுகளும் கடைகளும் இடிந்து விழுந்தன. ஜீலம், மிர்பூர் நகரங்களுக்கு இடைப்பட்ட சாலைப் பகுதிகளில் நீண்ட பிளவுகள் ஏற்பட்டன. நிலநடுக்கத்தால் அச்சத்தில் உறைந்துபோன மக்கள் நேற்று முன்தினம் இரவு சாலைகளில் படுத்துறங்கினர். அவர்களுள் சிலர் நேற்றுக் காலை தங்களது வீடு களுக்குத் திரும்பி, சேதமடையாமல் எஞ்சியிருந்த பொருட்களை அள்ளிச் சென்றனர்.
நிலநடுக்கத்தில் மாண்டோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் இம்ரான் கான், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

