ஆர்டிஎஸ் (RTS) ரயில்சேவை நிறைவேறும் என ஜோகூர்வாசிகள் பலரும் எதிர்பார்ப்பு

ஆர்டிஎஸ் (RTS) ரயில்சேவை நிறைவேறும் என ஜோகூர்வாசிகள் பலரும் எதிர்பார்ப்பு

2 mins read
30e51fe1-ccb1-4b62-a3f7-7adfe9640c67
ஜோகூர்-சிங்கப்பூர் கடற்பாலம். படம்: பெரித்தா ஹரியான் -
Google News Preferred Icon

ஜோகூர் பாருவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் துரித ரயில் சேவை (ஆர்டிஎஸ்) அமைக்கும் திட்டத்திற்கு அளிக்கப்பட்ட ஆறு மாத காலக்கெடு முடிவடைவதற்கு ஒரு வாரத்திற்கும் குறைவாகவே உள்ள நிலையில், இறுதி முடிவு என்னவாக இருக்கும் என ஜோகூர்வாசிகள் பலரும் பதற்றத்துடன் இருக்கின்றனர்.

ஜோகூர் கடற்பாலத்திலும் இரண்டாவது இணைப்பிலும் போக்குவரத்து நெரிசல் மோசமடைந்து வருகிறது. இரு பாலக்களையும் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வார இறுதி நாட்களிலும் பொது விடுமுறை நாட்களிலும் நெரிசல் மிகவும் மோசமாக இருக்கிறது.

தற்போது, சுங்கத்துறை, குடிநுழைவு, நோய்த்தொற்றுத் தடைகாப்பு நிலையத்தைத் தினமும் 367,000க்கும் மேலானோர் பயன்படுத்துகின்றனர். ஜோகூர் பாருவின் பக்கம் 254,000 பேர் சுங்கத்துறையைப் பயன்படுத்துகின்றனர். இரண்டாவது இணைப்பை 113,000 பேர் பயன்படுத்துகின்றனர்.

துரித ரயில்சேவை திட்டத்தை செப்டம்பர் 30 வரை ஒத்திவைக்கும்படி இவ்வாண்டு மே மாதம் மலேசியா கேட்டுக்கொண்டது. ரயில்சேவைக்காகும் செலவைக் குறைப்பதற்குப் புதிய வழிகளைத் தேட மலேசியா விரும்பியது.

இதற்கிடையே, சுங்கத்துறையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துக்கொண்டே இருப்பதால், துரித ரயில்சேவை திட்டம் அமலாக்கப்படவேண்டும் என எதிர்பார்ப்பதாக ஸ்டுலாங் சட்டசபை உறுப்பினர் ஆன்ட்ரூ சென் கூறினார்.

"2017 டிசம்பரில், இரு நாட்டிலுள்ள சுங்கத்துறை நிலையங்கள் தினமும் 279,000 பயணிகளைக் கையாண்டன. இவ்வாண்டு மே மாதம், இந்த எண்ணிக்கை 31% அதிகரித்து தினமும் 357,000 மக்களை எட்டியுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து ஆண்டு இறுதிக்குள் ஜோகூர் பாரு சுங்கத்துறை நிலையத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளோன்றுக்கு 300,000ஐ எட்டிவிடும் என எதிர்பார்க்கிறேன்," என்றார் அவர். கடற்பாலத்தின் போக்குவரத்து நெரிசலைத் தணிக்க துரித ரயில்சேவை கண்டிப்பாக உதவும் என்றார் அவர்.

செய்தி: 'த ஸ்டார்' (மலேசியா)