நியூயார்க்: திரு டிரம்ப் தம் அதிபர் பதவியை முறைகேடாகப் பயன்படுத்தினார் என்று கூறி, அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகக் கட்சித் தலைவர் நான்சி பெலோசி அவர்மீது முதல் கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனை அடுத்து நேற்று அமெரிக்க உளவுத்துறையின் பொறுப்புத் தலைவர் திரு ஜோசஃப் மெக்குவாயர் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டு சாட்சியம் அளித்தார்.
தற்காலிக தலைமை நிர்வாகியாக உள்ள திரு மெக்குவாயர், இப்பதவியை ஏற்று இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். உக்ரேன் அதிபருக்கும் அமெரிக்க அதிபருக்கும் இடையே நடந்த உரையாடலின் அடிப்படையில் அமெரிக்க உளவுத்துறைக்கு வந்த ரகசிய புகார் மனுவை முதலில் அவையின் புலனாய்வுக் குழுவுக்குத் தர முடியாது என உளவுத்துறை கூறியது. ஆனால் இப்பொழுது ரகசிய புகார் மனுவை வழங்கியுள்ளது.
உளவுத்துறை தொடர்பான குழுவில் இருக்கும் பிரதிநிதிகள் அந்தப் புகார் மனுவைப் பரிசீலித்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
புலனாய்வுக் குழுவின் உறுப்பினர்களாக உள்ள குடியரசு கட்சியினரும் ஜனநாயக கட்சியினரும் அந்தப் புகாரில் டிரம்புக்கு எதிராக பல விஷயங்கள் உள்ளன. அவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக அதிபர் டிரம்ப், தமது அரசியல் எதிரியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவரும் அக்கட்சியின் அதிபர் வேட்பாளராகக்கூடும் என்று தற்போதைய நிலையில் இருப்பவருமான ஜோ பைடன் என்பவரின் மகனான ஹன்டர் பைடன் என்பவர் குறித்து விசாரிக்குமாறு உக்ரேனிய அதிபர் விளோடிமிர் ஸெலன்ஸ்கி என்பவரைத் தொலைபேசி உரையாடலில் தூண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உக்ரேனிய அதிபர் அவ்வாறு செய்தால்தான் அந்நாட்டுக்கான நிதியுதவியைத் தான் வழங்க முடியும் என்று டிரம்ப் கூறியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இதை மறுக்கும் அதிபர் டிரம்ப், தம்முடைய தொலைபேசி உரையாடலில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்று பகிரங்கமாகக் கூறுகிறார்.
அதன்படி வெள்ளை மாளிகை இரு நாடுகளின் அதிபர்கள் நடத்திய தொலைபேசி உரையாடல் சுருக்கத்தை நேற்று முன்தினம் வெளியிட்டது.
ஆனால் 30 நிமிடங்கள் பேசியதாக கூறப்பட்ட உரையாடலின் எழுத்து வடிவம் 12 நிமிடங்களுக்கு மட்டுமே உள்ளது. மீதி 18 நிமிடங்கள் பேசிய உரையாடல் துண்டிக்கப்பட்டுள்ளது.

