லண்டன்: பிரெக்சிட் திட்டம் நிறைவேறுவது உறுதி என்று நேற்று கூறிய பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், அது நடக்காமல் போனால் அக்டோபர் 31ஆம் தேதியன்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விடைபெற்றுக்கொள்ளும் என்று கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களிடம் கூறினார்.
அத்துடன் தொழிற்கட்சித் தலைவரான ஜெரமி கோர்பினின் கோழைத்தனம் குறித்தும் ஜான்சன் பேசினார். பொதுத் தேர்தல் வந்தால் தாம் நிச்சயம் தோல்வியைத் தழுவுவார் என்று கோர்பின் அறிந்திருப்பதாக ஜான்சன் சுட்டினார். பிரிட்டிஷ் அரசியலில் நிலவி வரும் நச்சுத்தன்மையைத் தடுத்து நிறுத்துவதற்கு ஆகச் சிறந்த வழி, பிரெக்சிட் திட்டம் நிறைவேறுவது தான் என்றார் அவர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக விடுக்கப்படும் அனைத்து மிரட்டல்களையும் மிகக் கடுமையாக தாம் கருதுவதாகவும் ஜான்சன் தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பில் ஜான்சன் நாடாளுமன்றத்துடன் மோதலில் ஈடுபட்டுள்ளார்.
ஒன்றியத்துடன் ஒப்பந்தம் செய்துகொள்ள ஜான்சன் விரும்பினாலும் பிரிட்டன் பயனுள்ள திட்டங்களை முன்வைக்க வேண்டும் என ஒன்றியம் எதிர்பார்க்கிறது. இதனால் ஒப்பந்தத்திற்கு இன்னமும் ஒன்றியம் பச்சை கொடி காட்டவில்லை. இதற்கிடையே பிரெக்சிட் குறித்து ஒன்றியம் முன்வைத்த ஒப்பந்தம் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் ஒப்பந்தம் குறித்து ஜான்சன் மேலும் பேச்சுவார்த்தை நடத்தவும் தயார். அல்லது அக்டோபர் 31ஆம் தேதியன்று ஒன்றியத்திலிருந்து ஒப்பந்தம் இன்றி வெளியேறவும் தயார் என்று தெரிவித்துள்ளார்.

