ஹாங்காங்: நிர்வாகப் பணியைத் தாம் ஒழுங்காகச் செய்யவில்லை என்று நேற்று நடைபெற்ற சமூகக் கலந்துரையாடலில் கூறினார் ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம்.
கிட்டத்தட்ட நான்கு மாத காலமாக போராட்டங்கள் நீடித்து வரும் நிலையில் திருவாட்டி லாம், பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்ட நேற்று சமூகக் கலந்துரையாடல் ஒன்றின் வழி பொதுமக்களைச் சந்தித்தார்.
வான் சாய் பகுதியில் உள்ள குவீன் எலிசபெத் விளையாட்டு அரங்கில் நேற்று இரவு 7 மணிக்குக் கலந்துரையாடல் தொடங்கியது.
இரண்டு மணிநேரம் நீடித்த இந்நிகழ்வில் திருவாட்டி கேரி லாமும் அவருடன் மூன்று உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் 150 பேர் வரை கலந்துகொள்ளலாம் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. அதில் பங்கேற்க விரும்பியோர், முன்னரே விண்ணப்பங்கள் சமர்ப்பித்துக் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.
உச்சநிலை பாதுகாப்புடன் மக்கள் முன்னிலையில் பேசினார் திருவாட்டி லாம்.
ஆர்ப்பாட்டங்களின்போது பலதரப்பட்ட வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்ட போலிசார் மீது விசாரணை மேற்கொள்ளப்படுவது குறித்துக் கேள்விகள் எழுந்தன.
திருவாட்டி லாம் பணியை விட்டு விலகவேண்டும் என்று வந்திருந்த ஒரு பெண்மணி உணர்ச்சிபூர்வமாகக் கூறினார்.
"கடந்த ஈராண்டாக நான் என் வேலையை ஒழுங்காகச் செய்யவில்லை. மக்களின் நிலையை உணரவில்லை. மக்களின் தேவைகளை நாங்கள் செவிசாய்க்கவில்லை," என்றார் திருவாட்டி லாம்.
மக்களுடன் மீண்டும் ஓர் இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளவும் பொதுமக்களின் ஆதங்கத்தைப் போக்கவும் பல கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ள திருவாட்டி லாம், நடத்திய முதல் சமூகக் கலந்துரையாடல் இது.
குற்றவாளிகளைச் சீனாவுக்குக் கொண்டுசென்று விசாரிக்க வகைசெய்யும் விதமாக தாக்கல் செய்யப்பட்ட நாடு கடத்தல் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் போராட்டங்கள் வெடித்ததை அடுத்து இக்கலந்துரையாடல் நிகழ்ந்துள்ளது.

