கொலொம்போ: ஐக்கிய நாடுகளின் சபையின் அமைதிப்படை நடவடிக்கைகளில் இலங்கை படையினர் ஈடுபடுவதைத் தடை செய்ய ஐநா அதிரடி முடிவெடுத்துள்ளது.
இலங்கை ராணுவ வீரர்களில் பலர்மீது ஏற்கெனவே பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் 2009ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின்போது பல்லாயிரக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்த படையின் ராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா, அண்மையில் இலங்கையின் புதிய ராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
இதன் காரணமாகவே ஐநா இப்போது இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது என்று ஐநா பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹன் தெரிவித்தார். ஐநா அமைதிப்படை பல்வேறு நாடுகளில் அமைதியை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதில் இலங்கை ராணுவ வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அடுத்த மாதம் முதல் திருப்பி அனுப்பி வைக்கப்படுவர் என்றும் புதிய இலங்கை படையினர் இணைத்துக்கொள்ளப்படமாட்டா என்றும் பர்ஹான் ஹன் குறிப்பிட்டுள்ளார். போர்க்குற்றவாளியான சவேந்திர சில்வாவை ராணுவத் தளபதியாக நியமிக்கக்கூடாது எனக் கடும் எதிர்ப்பு எழுந்தது. அத்துடன் ஐநா மனித உரிமைகள் ஆணையமும் அதன் அதிருப்தியைத் தெரிவித்திருந்தது. ஆனால் இலங்கை அரசு இதன் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனையடுத்தே ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையிலிருந்து இலங்கையை நீக்க முடிவு செய்யப்பட்டது. இது அனைத்துலக அளவில் இலங்கைக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

