சீன ராணுவ வளர்ச்சியை தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதும் ஜப்பான்

சீன ராணுவ வளர்ச்சியை தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதும் ஜப்பான்

2 mins read
ea537995-ce5f-42df-aef0-08f349e81600
-

அணுவாயுதம் தாங்கிய ஏவுகணைகளை வடகொரியா வைத்திருந்தாலும் சீனாவையே முக்கிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக ஜப்பான் குறிப்பிட்டுள்ளது. நேற்று வெளியான தோக்கியோவின் வருடாந்திர தற்காப்பு வெள்ளை அறிக்கை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, பாதுகாப்பு ஆய்வில் ஜப்பானின் நட்பு நாடான அமெரிக்கா பற்றிய குறிப்பு உள்ளது. முதன்முறையாக, அந்த அறிக்கையில் வடகொரியாவை மூன்றாவது இடத்துக்குத் தள்ளி சீனா இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது. ரஷ்யா நான்காமிடத்தில் உள்ளது.

"சீனா ராணுவத்தைப் பலப்படுத்துவதற்காக அதிக அளவில் செலவிடுகிறது. மேற்கு பசிபிக், சுஷிமா நீரிணையின் வழியாக ஜப்பான் கடல் பகுதிக்குள் அடிக்கடி சீனா அதிக அளவிலான வான்வெளி, கடல் ராணுவத் தளவாடங்களை அமர்த்துகிறது," என்று ஜப்பானிய தற்காப்பு அமைச்சர் டாரோ கோனோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வடகொரியா, சீனா ஆகியவற்றின் ராணுவ மேம்பாடுகளுக்கு ஈடுகொடுக்கும் நோக்கில், ஜப்பான் தற்காப்புக்காக செலவிடும் தொகை கடந்த ஏழு ஆண்டுகளில் பத்தில் ஒரு பங்கு அதிகரித்துள்ளது.

சீனா ராணுவத் தளவாடங்களை மேம்படுத்துவதையடுத்து அமெரிக்காவிடமிருந்து மேம்பட்ட ஆயுதங்களை ஜப்பான் வாங்குகிறது.

ஒன்பது லாக்ஹீட் மார்டின் எஃப்-35 ரக விமானங்கள், குறுகிய தூரத்தில் மேலெழும்பி, தரையிறங்கக்கூடிய எஸ்டிஓவிஎல் ரக போர் விமானங்கள் ஆகியவற்றை வாங்க ஜப்பான் தனது அண்மைய வரவுசெலவுத் திட்டக் கோரிக்கையில், 115.6 பில்லியன் யென் (S$1.48 பில்லியன்) தொகையைக் கேட்டிருந்தது. கடந்த ஏப்ரலில் தொடங்கிய நிதியாண்டில் அது தற்காப்புக்காக செலவிடத் திட்டமிட்ட 5.32 டிரில்லியன் யென் (S$68.15 பில்லியன்) தொகையின் ஓர் அங்கம் அது.

தனது ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் நோக்கில் சீனா ஆயுதங்களையும் போர் விமானங்களையும் உருவாக்குகிறது.

ஜப்பான் கடல், வான்வெளிக்கு அருகில் அடிக்கடி ரோந்து செல்லும் சீனாவின் நடவடிக்கையை, "ஒரு தேசிய பாதுகாப்பு அக்கறைக்குரியது," என்று ஜப்பானின் தற்காப்பு வெள்ளையறிக்கை குறிப்பிட்டது.

இந்தியா, ஆசியான் நாடுகள், ஆஸ்திரேலியா போன்றவையும் வெள்ளை அறிக்கையில் முக்கிய இடம்பிடித்துள்ளன.