மகாதீர்: அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் பதவியில் நீடிப்பேன்

மகாதீர்: அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் பதவியில் நீடிப்பேன்

2 mins read

மலேசியாவின் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பாக தாம் பிரதமர் பதவியிலிருந்து விலகி அடுத்த பிரதமருக்கு வழிவிட உறுதியளிப்பதாக தற்போதைய பிரதமர் மகாதீர் முகமது கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு மே மாத வாக்கில் பிரதமர் பதவியை டாக்டர் மகாதீர் தம்மிடம் ஒப்படைப்பார் என எதிர்பார்ப்பதாக திரு அன்வார் கூறிய ஒரு வாரத்துக்குள் டாக்டர் மகாதீரின் இந்தக் கூற்று வெளியாகியுள்ளது.

அடுத்த பொதுத் தேர்தல் 2023ஆம் ஆண்டு நடைபெறும் என்று கூறப்படும் நிலையில், "அதிகபட்சமாக மூன்றாண்டுகளுக்கு நான் பிரதமர் பதவியில் இருக்கலாம்," என்று குறிப்பிட்டுள்ளார் டாக்டர் மகாதீர்.

நேற்று முன்தினம் நியூயார்க்கில் வெளிநாட்டு உறவுகள் தொடர்பில் அமெரிக்க மன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் இதனை டாக்டர் மகாதீர் முகமது குறிப்பிட்டதாக பெர்னாமா தெரிவித்தது.

94 வயதாகும் திரு மகாதீர், நாள் ஒன்றுக்கு தாம் 18 மணி நேரம் பணிபுரிவதாகவும், தாம் பதவி விலகுவதற்கு முன்பு பணிகளை முடிக்க அதிக காலம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பக்கத்தான் ஹரப்பான் வேறு மூன்று கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டது.

அந்தக் கூட்டணிக்கும், அந்தப் பொதுத் தேர்தலுக்கும் டாக்டர் மகாதீர் தலைமை தாங்குவது, கூட்டணி வென்றால் அவர் பிரதமராகி திரு அன்வாருக்கு மன்னரிடம் மன்னிப்புக் கோருவது, பின்னர் பிரதமர் பதவியைத் திரு அன்வாரிடம் ஒப்படைப்பது ஆகிய ஒப்பந்தங்கள் அப்போது செய்துகொள்ளப்பட்டன.

பிரதமர் பதவியை எப்போது திரு அன்வாரிடம் கொடுக்க வேண்டும் என்ற கால வரையறையைக் கொண்ட ஆவணங்கள் எதுவும் தேர்தலுக்கு முன்பு இல்லை என்று பல்கலைக்கழக மாணவர்களிடையே கடந்த திங்கட்கிழமை டாக்டர் மகாதீரின் ஊடக, தொடர்பு ஆலோசகர் காதிர் ஜாசின் கூறியது குறிப்பிடத்தக்கது.