டிரம்ப்புக்கு எதிராக தகவல் தந்த உளவு அதிகாரி

டிரம்ப்புக்கு எதிராக தகவல் தந்த உளவு அதிகாரி

2 mins read

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு எதிரான தகுதி நீக்கப் புகார் தொடர்பாக தகவல் தந்தவர் சிஐஏ எனப்படும் உளவு அமைப்பின் அதிகாரிகளில் ஒருவர் என்று கூறப்படுகிறது. பெயர் குறிப்பிடப்படாத அந்த அதிகாரி அதிபரின் வெள்ளை மாளிகையில் வேலை பார்த்தவர் என்றும் அந்த செய்தித் தகவல் தெரிவிக்கிறது.

அதிபர் டிரம்ப் தமது அரசியல் எதிரியான ஜோ பைடன் குறித்து விசாரிக்குமாறு உக்ரேனிய அதிபர் விளாடிமிர் ஸெலன்ஸ்கியை நெருக்கினார் என்றும் பின்னர் அந்தத் தொலைபேசி உரையாடலை மறைக்க முற்பட்டார் என்றும் அந்த உளவுத் துறை ஊழியர் கூறியதாக அறியப்படுகிறது.

தகவல் தந்த உளவு அதிகாரிக்குத் தகவல் கொடுத்தது யார் என்று வினவிய அதிபர், அவ்வாறு தகவல் தந்தவர் ஓர் உளவாளிக்கு சமம் என்று கூறியதாகத் தெரிகிறது.

அதிபர் டிரம்ப்புக்கும் உக்ரேனிய அதிபருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல் வழக்கமான கணினி கட்டமைப்பில் சேமித்து வைக்கப்படாமல் தரம் பிரித்துச் சேமித்து வைக்கப்படும் பகுதியில் சேமித்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2020ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தமக்கு எதிரான அரசியல்வாதியான ஜோ பைடன் மீது அவதூறு பரப்ப அதிபர் டிரம்ப் வெளிநாட்டு உதவியை நாடினார் என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இதற்காக, அவர் உக்ரேனுக்கு வழங்கப்படவுள்ள ராணுவ உதவியைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டிரம்ப், தமக்கெதிரான தகுதிநீக்க விசாரணையைப் பொய்யானது என்றும் வேண்டுமென்றே குற்றம் கண்டுபிடிக்கும் செயல் என்றும் கூறியுள்ளார்.

உக்ரேனிய அதிபருடன் தொலைபேசியில் பேசுவதற்கு சில நாட்களுக்குமுன் தான் அந்நாட்டுக்கான 400 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமானமுள்ள ராணுவ உதவியை நிறுத்தியதை ஒப்புக்கொண்ட டிரம்ப், ஆனால் அது உக்ரேனிய அதிபருக்கு நெருக்குதலைக் கொடுக்கும் நோக்கத்தில் அல்ல எனவும் விளக்கமளித்துள்ளார்.