காஷோகி கொலைக்கு நானே பொறுப்பு: சவூதி இளவரசர்

காஷோகி கொலைக்கு நானே பொறுப்பு: சவூதி இளவரசர்

1 mins read

ரியாத்: பத்திரிகையாளர் ஜமால் காஷோகி கொல்லப்பட்டதற்குத் தானே பொறுப்பு என்று சவூதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பான ஆவணப் படம் அடுத்த மாதம் முதல் தேதியன்று ஒளிபரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சவூதி அரசை காஷோகி கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதி துணைத் தூதரகத்தில் வைத்து அவர் கொல்லப்பட்டார்.

அந்தக் கொலைக்கு சவூதி இளவரசரே காரணம் என அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் குற்றம் சாட்டிய நிலையில், அச்சம்பவத்திற்கும் தங்களது இளவரசருக்கும் தொடர்பில்லை என்று சவூதி அதிகாரிகள் மறுத்து வந்தனர்.

இந்த நிலையில், "காஷோகி கொலைக்கு நான் பொறுப்பேற்கிறேன். ஏனெனில், எனது பார்வையின்கீழ்தான் அவர் கொல்லப்பட்டார்," என்று இளவரசர் முகம்மது பின் சுல்தான், அமெரிக்க ஒலிபரப்பு நிறுவனமான 'பிபிஎஸ்'ஸுக்கு அளித்த பேட்டியில் கூறியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் பணியாற்றி வந்த திரு காஷோகி, தமது திருமணம் தொடர்பாக சில ஆவணங்களைப் பெறுவதற்காக இஸ்தான்புல்லில் உள்ள சவூதி துணைத் தூதரகத்திற்குச் சென்றார். அதன் பிறகு அவரைக் காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டு, உடல் துண்டு துண்டாக்கப்பட்டு, அவை அந்த அலுவலகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.

காஷோகியின் மரணம் 'கொடூரமான குற்றம்' என்றும் 'வலி தரக்கூடிய சம்பவம்' என்றும் குறிப்பிட்ட இளவரசர், குற்றவாளிகள் நீதியின்முன் நிறுத்தப்படுவர் என்றும் அப்போது தெரிவித்திருந்தார்.