பிரிட்டிஷ் அமைச்சருக்கு சீனா கடும் கண்டனம்

பிரிட்டிஷ் அமைச்சருக்கு சீனா கடும் கண்டனம்

1 mins read

லண்டன்: ஹாங்காங் விவகாரம் தொடர்பில் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் கூறிய கருத்துக்கு லண்டனில் உள்ள சீனத் தூதரகம் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளது.

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தபோது, "ஹாங்காங்கில் நிலவும் சூழ்நிலை மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது," என்று வெளியுறவு அமைச்சர் டோமினிக் ராப் கூறியிருந்தார்.

"சீனா-பிரிட்டன் கூட்டுப் பிரகடனத்தில் கூறியுள்ளபடி சீனா கடப்பாட்டுடன் நடந்துகொள்ளும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்றும் அவர் சொல்லியிருந்தார்.

இதையடுத்து, "ஹாங்காங் விவகாரம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை பொறுப்பற்ற முறையில் பிரிட்டிஷ் அதிகாரி கருத்துரைத்துள்ளது கவலையளிப்பதாக உள்ளது. அதற்கு நாங்கள் கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்கிறோம்," என்று சீனத் தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஹாங்காங்கை நிர்வகிக்க அல்லது மேற்பார்வை செய்ய பிரிட்டனுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் அது முழுக்க முழுக்க சீனாவின் உள்விவகாரம் என்றும் அவர் கூறினார்.

1997ஆம் ஆண்டு சீனா வசம் ஹாங்காங் ஒப்படைக்கப்பட்ட பிறகு, அனைத்துலக நாடுகளால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட 'ஒரு நாடு, இரு அமைப்புகள்' முறையானது ஹாங்காங்கில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது என்றும் அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார்.