மிரி: சரவாக் மாநிலத்தில் கொடுமையான சூழலில் 20 ஆண்டுகளுக்கு மேலாக அடைத்து வைக்கப்பட்டு இருந்த கரடியை வனப் பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டுள்ளனர். தலைநகர் வச்சிங் அருகில் உள்ள செரியன் பகுதியில் கம்போங் ரசாவ் பண்ணை வீடு ஒன்றில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் அது மீட்கப்பட்டது.
த ஸ்டார் செய்தித்தாள் நிருபர் ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து சரவாக் வனப் பாதுகாப்புக் கழக அதிகாரிகள் செயலில் இறங்கியதாக கழகம் நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவரிடமிருந்து தாம் வாங்கிய கரடியை வளர்க்க உரிமம் பெற்றிருந்ததாக அதன் உரிமையாளர் கூறியதாக கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜோல்கிப்லி முகம்மது அடோன் கூறினார்.
ஆனால் மிகச் சிறிய கூண்டில் ஆபத்தான வகையில் கரடி அடைக்கப்பட்டு இருந்ததால் உரிமம் ரத்து செய்யப்பட்டு மீட்கப்பட்டதாகவும் 85 கிலோ எடையுள்ள அந்தக் கரடி மாத்தாங் வனவிலங்கு சரணாலயத்துக்குப் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இரண்டு நாட்களில் இரண்டு கரடிகள் மீட்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
வியாழக்கிழமை கூச்சிங்கில் உள்ள டெமா லாவ் குடியிருப்புப் பேட்டையில் ஏழு ஆண்டுகளாக கூண்டில் அடைக்கப்பட்டிருந்த ஒரு கரடியை அதிகாரிகள் மீட்டனர்.

