ஜோகூர் வறண்ட நிலையால் பல நூறாயிரம் மக்கள் தவிப்பு

ஜோகூர் வறண்ட நிலையால் பல நூறாயிரம் மக்கள் தவிப்பு

2 mins read
810722f6-4c5f-4797-a3df-33fbfe6a2a13
-

ஜோகூரின் வறண்ட பருவநிலை காரணமாக அம்மாநிலத்தின் மேலும் சில பகுதிகளில் தண்ணீர் பகிர்வு முறை நடப்புக்கு வருகிறது. ஏற்கெனவே சிம்பாங் ரெங்காம் பகுதியில் அமல்படுத்தப்பட்ட தண்ணீர் பகிர்வு காரணமாக 150,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வறட்சி காரணமாக மக்காப் அணையின் நீர் மட்டம் இறங்கிவிட்டதால் அப்பகுதி மக்களின் சிரமம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அக்டோபர் 8ஆம் தேதி கோத்தா திங்கியில் உள்ள லெபாம் அணையிலிருந்து தண்ணீர் பெற்று வரும் 100,000 மக்கள் தண்ணீர் பகிர்வால் பாதிக்கப்பட உள்ளனர். ஜோகூர் அனைத்துலக வர்த்தக, முதலீடு, பயனீட்டுக் குழுவின் தலைவர் ஜிம்மி புவா நேற்று இத்தகவலை தெரிவித்தார்.

அக்டோபர் 8ஆம் தேதி அறிமுகமாகும் தண்ணீர் பகிர்வின் காரணமாக பண்டார் பெனாவர், கோத்தா திங்கியின் சில பகுதிகள், பெங்கராங், தஞ்சோங் பலாவ், தெலுக் ரெமுனியா போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் சிரமப்படுவர் என்று அவர் கூறினார்.

லெபுங் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையின் நீர்மட்டம் குறைந்து வருவதைத் தொடர்ந்து மெர்சிங் வட்டாரத்திலும் தண்ணீர் பகிர்வு முறை அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மூலம் கிட்டத்தட்ட 25,000 பேர் பாதிப்புக்கு ஆளாவார்கள் என்று ஜிம்மி புவா கூறினார். இருந்தபோதிலும் மெர்சிங் தண்ணீர் பகிர்வு எப்போது அறிமுகமாகும் என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்றார் அவர். வறண்ட வானிலை காரணமாக ஜோகூரின் லிங்கியு நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 50 விழுக்காட்டுக்கும் கீழ் இறங்கிவிட்டது. இவ்வாண்டின் தொடக்கத்தில் அந்த அளவு 72 விழுக்காடு இருந்ததும் என்றும் இதுபோன்றதொரு நீர்மட்ட இறக்கம் கடந்த 2015ஆம் ஆண்டு காணப்பட்டது என்றும் சிங்கப்பூரின் பொதுப் பயனீட்டுக் கழகம் நேற்று கூறி இருந்தது.