ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல்

ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல்

2 mins read
8716bb2c-318d-47b9-a568-b2e3d0a5bad8
ஆர்ப்பாட்டக்காரர்களை மடக்கிப் பிடிக்கும் ஹாங்காங்கின் கலவரத் தடுப்பு அதிகாரிகள். படம்: ராய்ட்டர்ஸ் -

ஹாங்காங்: நாளை சீனா அதன் 70வது தேசிய தினத்தை கொண்டாடுகிறது. சீனாவின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் ஹாங்காங்கில் கடந்த சில மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சீன அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான ஹாங்காங் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இந்நிலையில், சீனாவின் தேசிய தினத்தையொட்டி ஹாங்காங் போலிசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர். நேற்று ஹாங்காங் வீதிகளில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி போலிசார் கண்ணீர் புகை வீசினர்.அதை மீறி அரசாங்கத்தின் தலைமையகத்தை நோக்கிச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அடி விழுந்தது. ஹாங்காங்கின் மத்திய வர்த்தக வட்டாரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலிசாருக்கும் இடையே கைகலப்பு மூண்டது.

தங்களை நோக்கி போத்தல்களையும் மற்ற பொருட்களையும் வீசிய ஆர்ப்பாட்டக்காரர்களை போலிசார் விரட்டியடித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் அரசாங்கத்துக்குச் சொந்தமான கட்டடங்களுக்குள் பெட்ரோல் குண்டுகள், செங்கற்கள் ஆகியவற்றை வீசியதும் பதற்றநிலை அதிகரித்தது. அரசாங்க கட்டடங்களிலிருந்து விரைந்து வந்த கலவரத் தடுப்பு போலிசாரைக் கண்டு ஆர்ப்பாட்டக்கார்கள் சிதறி ஓடினர்.

தங்களிடம் வசமாக மாட்டிக்கொண்டோரை போலிசார் மடக்கிப் பிடித்தனர். சிக்கிக்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் தப்பிச் செல்லாதிருக்க அவர்களது கைகளையும் கால்களையும் அதிகாரிகள் கயிற்றால் கட்டினர். கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் பல ஆர்ப்பாட்டக்காரர்கள் அசைய முடியாமல் சாலைகளில் கிடந்தனர்.

சிறிது நிமிடங்களுக்குள் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. போலிசார் இவ்வளவு கடுமையாக நடந்துகொள்வர் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை என அங்கிருந்து தப்பிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிர்ச்சியுடன் கூறினர்.

போலிசாரால் கைது செய்யப்பட்டவர்களில் ஏறத்தாழ 30 பேர் அரசாங்க கட்டடத்தின் வளாகத்திற்குள் கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு போலிஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

ஹாங்காங் மக்களை கைது செய்யாதீர்கள் என்று முழக்கமிட்டோருடன் போலிசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள ஹாங்காங் தலைவர் கேரி லாம் இன்று சீனாவுக்குச் செல்கிறார்.

கொண்டாட்டத்துக்குப் பிறகு அவர் நாளை இரவு ஹாங்காங் திரும்புவார் என எதிர்பார்க்கப்

படுகிறது.

இரவு நேரத்தில் திரும்பினால் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு கூடும் சாத்தியம் குறைவு என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

கடந்த வாரம் ஹாங்காங்கில் திருவாட்டி லாம்மின் தலைமையில் நடைபெற்ற பொதுக் கலந்துரையாடலுக்குப் பிறகு அரங்கத்தை ஆர்ப்பட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் அங்கிருந்து வெளியே வரமுடியாமல் அங்கேயே பல மணி நேரம் இருக்க வேண்டிய நிலை திருவாட்டி லாம்முக்கு ஏற்பட்டது.

ஹாங்காங்கில் நடத்தப்படும் போராட்டங்களுக்கு அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் காரணம் என்று சீனா குற்றம் சுமத்தியுள்ளது.